புதுக்கோட்டை,மே.12: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அருணா, தலைமையில் நேற்று நடைபெற்றது இதில் பொதுமக்களிடம் இருந்து 310 மனுக்கள் பெறபட்டது.புதுக்கோட்டையில் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று(11ஆம் தேதி) திங்கட்கிழமை காலை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையஉத்தரவின் பேரில் கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி மாலைமுதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. கடந்த 6ஆம்தேதி மாலைமுதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் விலக்கிக் கொள்ளப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த காலகட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கேஸ் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம், மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், ஓய்வு பெற்றோர் குறைதீர்க்கும் கூட்டம், மாற்றுத் திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம், முன்னாள் படைவீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம், சிறப்பு மனுக்கள் முகாம் போன்றவை அனைத்தும் தடை செய்யப் பட்டிருந்தன. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதால் நேற்று திங்கட்கிழமை முதன் முறையாக பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பேசியதாவது : தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுற்று 56 நாட்டகளுக்கு பிறகு மீண்டும் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெறுகிறது. பொது மக்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையுடன் அரசு அலுவலர்களைத் தேடி வந்து மனுக்களை வழங்குகிறார்கள். அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் அரசு அலுவலர்களின் பணி இருக்க வேண்டும். மனுக்களின் மீது உடனுக்குடன் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 310 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைச்சாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா, மாவட்ட வழங்கல் அலுவலர் ஷோபா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சூரியபிரபு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
