பறவைகளை விற்கும் குறவர்கள் வனத்துறை தீவிர கண்காணிப்பு

புதுச்சேரி,  மார்ச் 1:  புதுவை கிராமப்புறங்களில் பறவைகளை பிடித்து விற்கும் குறவர்களை  கைது செய்ய வனத்துறை தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளது.  புதுவை, வில்லியனூர் பகுதிகளில் பறவைகள் வேட்டையாடப்பட்டு விற்கப்படுவதாக  கிடைத்த தகவலின்பேரில் 10 நாட்களுக்கு முன்பு அங்கு சோதனையில் ஈடுபட்ட  வனத்துறையினர் 25 கிளிகள், கொக்குகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.  கூண்டுகளை போட்டுவிட்டு தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.  இதனிடையே  சண்முகாபுரத்தில் நரிக்குறவர்கள் கிளிகள் விற்பவதாக தகவல் கிடைக்கவே,  வனத்துறை ஊழியர்கள் திடீரென அங்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது  வனத்துறையினரை கண்டதும் நரிக்குறவர்கள் கிளிகளை அப்படியே போட்டுவிட்டு  தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து அங்கிருந்த 10 கிளிகளை மீட்ட வனத்துறை அவற்றை  அலுவலகம் கொண்டுவந்து பராமரித்து வருகின்றனர். இதேபோல் ஊசுட்டேரி,  பாகூர், திருக்கனூர், மதகடிப்பட்டு, வில்லியனூர் உள்ளிட்ட  கிராமப்புறங்கள் மற்றும் நரிக்குறவர்கள் வசிக்கும் பகுதிகளிலும்  வனத்துறை தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. பறவைகளை  விற்பவர்களை பிடித்து அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும்  முடிவு செய்துள்ளனர்.

Related Stories:

>