கேரளத்தில் முரண்டுபிடிக்கும் மூன்று தலைவர்கள்: தேர்தல் முடிவு வந்து ஒரு வாரம் கடந்தும் முதல்வரை தேர்வு செய்ய முடியாமல் திணறும் காங்கிரஸ்

திருவனந்தபுரம்: கேரளத்தில் தேர்தல் முடிவு வந்து ஒரு வாரம் கடந்த பிறகும் முதல்வரை தேர்வு செய்ய முடியாமல் காங்கிரசில் கடும் குழப்பம் நிலவி வருகிறது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள், தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கேரளத்தில் 10 வருடங்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த காங்கிரஸ் இந்த தேர்தலில் அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. மொத்தமுள்ள 140 சட்டப்பேரவை தொகுதிகளில் 102 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த மாபெரும் வெற்றி கேரளத்தில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இப்போது அவர்கள் அனைவரும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

தேர்தல் முடிவு வந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் இதுவரை முதல்வரை தேர்ந்தெடுக்க முடியாதது தான் இதற்கு காரணமாகும். முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளரும், எம்பியுமான கே.சி. வேணுகோபால், கடந்த பினராயி விஜயன் ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சதீசன், மூத்த தலைவர் ரமேஷ் சென்னித்தலா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இவர்களுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் தொண்டர்கள் பேரணி நடத்தினர். சாலை நெடுகிலும் பேனர்களும் வைத்தனர். வேணுகோபாலின் பேனர் மீது அவரது ஆதரவாளர்கள் ஒருபுறம் பாலாபிஷேகம் நடத்த, இன்னொரு புறம் எதிர்கோஷ்டியை சேர்ந்தவர்கள் கழிவு ஆயிலை ஊற்றிய சம்பவமும் நடந்தது.

சூழ்நிலை விபரீதமாவதை உணர்ந்த காங்கிரஸ் மேலிடம், இது போன்ற நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு நிலைமை மோசமானது. யாரும் யாருக்கும் ஆதரவு தெரிவித்து வெளிப்படையாக கருத்துக்களை தெரிவிக்கக் கூடாது என்றும் காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டது. இதற்கிடையே முதல்வரை தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் மேலிடக் குழுவைச் சேர்ந்த 2 பேர் கடந்த வாரம் திருவனந்தபுரத்திற்கு வந்து ஆலோசனை நடத்தினர். இவர்கள் முதல்வர் பதவிக்கு போட்டியிடும் வேணுகோபால், சதீசன், ரமேஷ் சென்னித்தலா ஆகியோரிடமும், புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் இதில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. இதனால் மேலிடக்குழு ஏமாற்றத்துடன் டெல்லி திரும்பியது. இதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன் 3 பேரையும் காங்கிரஸ் மேலிடம் டெல்லிக்கு வரவழைத்தது. அவர்களிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் பல மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் வேணுகோபால், சதீசன் மற்றும் ரமேஷ் சென்னித்தலா ஆகியோர் தங்களது பிடிவாதத்தை கைவிடவில்லை. இதனால் இந்தப் பேச்சுவார்த்தையிலும் எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

எனக்குத்தான் அதிக எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது என்று வேணுகோபாலும், நான்தான் கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றேன் என்று சதீசனும், கட்சியில் சீனியர் நான்தான் என்று ரமேஷ் சென்னித்தலாவும் கூறினர். இவர்கள் மூன்று பேருமே தங்களுக்குத் தான் முதல்வர் பதவி வேண்டும் என்று முரண்டு பிடித்ததால் காங்கிரஸ் தலைவர்களால் எந்த முடிவையும் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரும் கேரளத்திற்கு திரும்பிச் செல்ல அறிவுறுத்தப்பட்டனர். இதனால் ரமேஷ் சென்னித்தலாவும், சதீசனும் கேரளம் திரும்பினர். வேணுகோபால் தற்போதும் டெல்லியிலேயே உள்ளார். முதல்வரை தேர்வு செய்ய முடியாததால் இதுவரை இந்த விவகாரத்தில் தலையிடாமல் இருந்த சோனியாகாந்தியிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.

சோனியாகாந்தியிடம் இந்த விவகாரம் தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே தேர்தல் முடிவு வந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் முதல்வரை தேர்வு செய்ய முடியாதது காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. முஸ்லிம் லீக் உள்பட காங்கிரஸ் கூட்டணி கட்சித் தலைவர்களும் அதிருப்தியில் உள்ளனர். இதன் மூலம் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் இன்று அல்லது நாளை முதல்வரை அறிவிக்க காங்கிரஸ் மேலிடம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

மூத்த தலைவர்களுக்கு திடீர் அழைப்பு
முதல்வரை தேர்வு செய்வது நீண்டு கொண்டே செல்வதால் கேரள காங்கிரஸ் மூத்த தலைவர்களை டெல்லிக்கு அழைத்து ஆலோசனை நடத்த காங்கிரஸ் மேலிடம் தீர்மானித்துள்ளது. முன்னாள் மாநில தலைவர்களான கே.சுதாகரன், முரளீதரன், சுதீரன், முல்லப்பள்ளி ராமச்சந்திரன், எம்.எம். ஹசன் மற்றும் காங்கிரஸ் செயல் தலைவர்களான விஷ்ணுநாத், ஷாபி பரம்பில், அனில்குமார் ஆகியோரை காங்கிரஸ் மேலிடம் டெல்லிக்கு அழைத்துள்ளது. இவர்களுடன் இன்று ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் ஆலோசனை நடத்துகின்றனர். இவர்களிடம் கருத்துக்களை கேட்ட பின்னர் புதிய முதல்வரை அறிவிக்க காங்கிரஸ் மேலிடம் தீர்மானித்துள்ளது.

 

Related Stories: