சென்னை: இயக்கத்திற்கும், தலைமைக்கும் துரோகம் செய்துவிட்டு சென்றவர்களை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உதிர்ந்த ரோமங்கள் என்றே குறிப்பிடுவார். அந்த வகையில் அதிமுக-வில் இருந்து பதவிக்காக தவெக-விற்கு மாறுபவர்கள் “உதிர்ந்த ரோமங்கள்” என்று அதிமுக மூத்த தலைவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கருத்தை சுட்டி காட்டி விமர்சித்துள்ளார்.
அதிமுக-வில் இருந்து முன்னாள் அமைச்சர்களை குதிரை பேரத்தின் மூலம் தங்கள் பக்கம் தவெக-வினர் இழுக்கிறார்கள். முக்கியமாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிமுக நிர்வாகிகளை தவெக பக்கம் இழுத்து வருகிறார். ஏன் தவெக-வில் ஆட்களே இல்லையா..? குதிரை பேரத்தின் மூலம் அதிமுக நிர்வாகிகளை இழுப்பது தான் தூய சக்தி தவெக-வா? என்று அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தூய அரசியல் தருவோம் என்று கூறிவிட்டு, தலைமைச் செயலகத்திலேயே கட்சித் தாவல் பணிகளைச் செய்கிறார்கள். அரசியல் என்ன லாட்டரி வியாபாரமா? அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை விலை பேசி வாங்கி கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தமிழக அரசியலில் செய்து கொண்டிருக்கும் குதிரை பேரம், இன்று இந்திய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து கொண்டிருக்கிறது. மேலும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தவறான முடிவை எடுக்கு மாட்டார் என்று தான் நம்புவதாகவும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறியிருக்கிறார். உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்ற மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை தான் தற்போது வரை நாங்களும் பின்பற்றுகிறோம் என்றார்.
