அமைச்சர், இலாகா ஒதுக்கீடு விவகாரத்தில் பாஜகவுக்கு ‘தண்ணி’ காட்டும் ரங்கசாமி: அமித்ஷாவை சந்திக்க நமச்சிவாயம் டெல்லியில் முகாம்

 

புதுச்சேரி: புதுச்சேரியில் அமைச்சர் பதவி, இலாகா ஒதுக்கீடு விவகாரத்தில் பாஜவுக்கு தொடர்ந்து ரங்கசாமி தண்ணி காட்டி வரும் நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க டெல்லியில் பாஜ அமைச்சர் நமச்சிவாயம் முகாமிட்டுள்ளார். புதுச்சேரியில் தேஜ கூட்டணி ஆட்சியமைத்து ஒரு மாதம் ஆக போகிறது. முதல்வருடன், அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்ட நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆகியோருக்கு இன்னமும் இலாகா ஒதுக்கப்படவில்லை. மேலும் சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் ஆகியவை இதுவரை நடைபெறாமல் உள்ளது.

5 அமைச்சர்களை முழுமையாக தேர்வு செய்வதிலும், அவர்களுக்கான இலாகா ஒதுக்குவதிலும் என்ஆர் காங்கிரஸ், பாஜக இடையே ஆரம்பம் முதலே இழுபறி நீடித்து வருகிறது. இத்தோடு, நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்திலும் தேஜ அணிக்குள் நீடிக்கும் பனிப்போர் காரணமாக அமைச்சரவை விரிவாக்கம் காலதாமதம் ஆவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. நமச்சிவாயத்துக்கு உள்துறை வழங்க முடியாது, லஜக ஜோஸ் மார்ட்டினுக்கு அமைச்சரவையில் இடம் கிடையாது என்பதில் ரங்கசாமி பிடிவாதமாக இருப்பதால் பாஜ டெல்லி தலைமை, ரங்கசாமி மீது அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.

இருப்பினும் கொடுப்பதை கொடுங்கள் என மாநில தலைமை கூறியும் இவ்விவகாரங்களில் நேரடியாக அவர் பதில்தராமல் தொடர்ந்து மழுப்பலான பதிலளித்து டிமிக்கி கொடுப்பதால், அடுத்த கட்டத்துக்கு பாஜவால் செல்ல முடியாத நிலை உள்ளது. பாஜ தேசிய அமைப்பு செயலாளர் சந்தோஷ், ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா உள்ளிட்டோர் வந்து பேசியும் ரங்கசாமி பிடிகொடுக்கவில்லை. இதனிடையே நேற்று சட்டசபை வளாகத்தில் என்ஆர் காங்கிரஸ் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், தனது புதிய அறையில் பொறுப்பை ஏற்ற நிலையில் இந்நிகழ்வில் பங்கேற்ற ரங்கசாமி கூறுகையில், சபாநாயகர் யார்? என்பது விரைவில் தெரியவரும்.

அமைச்சரவை விரிவாக்கம் அடுத்த வாரம் இருக்கலாம். அமைச்சர், யாருக்கு எந்த துறை என்பது அப்போது அறிவிக்கப்படும். அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்காமல் இருப்பதால் அரசின் எந்த பணியும் முடங்கவில்லை. 20 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன் எனத் தெரிவித்தார். இந்த பரபரப்பான சூழலில் பாஜ அமைச்சர் நமச்சிவாயம் மீண்டும் அவசர பயணமாக நேற்றிரவு டெல்லி சென்றுள்ளார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமிருந்து வந்த அழைப்பின்பேரில் அவரை சந்திக்க, முகாமிட்டுள்ளதாக தெரிகிறது.

இன்று மாலை அமித்ஷாவை சந்திக்கும் நமச்சிவாயம், புதுச்சேரி அரசு நிலவரம் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்துகிறார். பாஜக அமைச்சர், சபாநாயகர் பதவி விவகாரம், இலாகா ஒதுக்கீடு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது. அதன்பிறகு இவ்விவகாரத்தில் இறுதிமுடிவெடுக்க முதல்வர் ரங்கசாமியிடம், அமித்ஷா தொலைபேசி மூலமாக பேச தீர்வு எட்டப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி வரு
கின்றன.

Related Stories: