சென்னை: தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா நியமனம் செய்யப்பட்டுஉள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களில் தவெக வெற்றி பெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் 2 இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து அவர் ஒரு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். அதிக இடங்களில் தவெக வெற்றி பெற்றாலும், மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதையடுத்து 5 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ், தலா 2 இடங்களில் வெற்றி பெற்ற விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து ஆட்சி அமைக்க 120 இடங்கள் தவெகவிற்கு கிடைத்தது.
இதையடுத்து தமிழக முதல்வராக விஜய் இன்று பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு 17வது சட்டப்பேரவை நாளை காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இதில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் பதவியேற்க உள்ளனர். எம்எல்ஏக்கள் பதவியேற்கும் வகையில் சோழவந்தான் தொகுதி தவெக எம்எல்ஏ கருப்பையா தற்காலிக சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய எம்எல்ஏக்கள் அவரது முன்னிலையில் நாளை பதவி ஏற்க உள்ளனர். தொடர்ந்து நாளை மறுதினம் புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது.
