காரைக்கால் நகராட்சி ஊழியர்களுக்கு நிலுவை சம்பளத்தை உடனே வழங்க எம்எல்ஏ வலியுறுத்தல்

காரைக்கால், மார்ச்1: காரைக்கால் நகராட்சி ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என காரைக்கால் தெற்கு தொகுதி எம்எல்ஏ அசனா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து காரைக்கால் தெற்குத் தொகுதி எம்எல்ஏ அசனா கூறியது: புதுச்சேரி அரசு காரைக்கால் மாவட்டத்திலுள்ள அனைத்து துறையின் ஊழியர்களையும் மற்றும் அரசு சார்ந்த நிறுவன ஊழியர்களையும் சமமாக பார்க்காமல், ஏற்றத்தாழ்வுடன் பார்த்து வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், நகராட்சி ஊழியர்களுக்கு கடந்த 5 மாதங்களாக சம்பளம் வழங்காததால், ஊழியர்களின் குடும்ப வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

இதேபோல், மாவட்டத்தில் உள்ள பல அரசுத்துறை ஊழியர்கள் நீண்ட காலமாக ஊதியம் பெறாமல் வேதனையில் உள்ளனர். இது அரசின் பாரபட்சத்தை காட்டுகிறது. இது தவறான அனுகுமுறையாகும். இதனை அரசு மாற்றிகொள்ள வேண்டும். மேலும், நகராட்சியில் பல பணியிடங்கள் காலியாகவும், ஊழியர்கள் குறைவாகவும் இருக்கும் சூழலில், பணிப்புரியும் ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்காமல் காலதாமதம் செய்வதால் அவர்கள் முழுமையாக பணிகளில் தன்னை ஈடுபடுத்தாமல் அலட்சியம் காட்டும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். இதனால் காரைக்கால் நகராட்சியில் பணிகள் அனைத்தும் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. நகராட்சி நிர்வாகமும் கேள்வி குறியாகும் சூழல் ஏற்பட்டு வருகிறது. காரைக்கால் நகராட்சி மீது அரசு முழு கவனம் செலுத்தி ஊழியர்களின் பணி சுமையை குறைக்கவும், நிலுவை சம்பளத்தை உடனே வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories:

>