புதுடெல்லி: நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களுக்கான விதிகளை அரசிதழில் வெளியிட்டு ஒன்றிய அரசு முழுமையாக நடைமுறைக்கு கொண்டு வந்தது. நாடு முழுவதும் ஏற்கனவே அமலில் இருந்த 29 பழைய தொழிலாளர் நலச் சட்டங்களை நவீனமாக்கி, அவற்றை ஒருங்கிணைத்து 4 புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகள் கொண்டு வரப்பட்டன. ஊதிய சட்ட தொகுப்பு 2019, தொழில்துறை உறவுகள் சட்ட தொகுப்பு 2020, சமூக பாதுகாப்பு சட்ட தொகுதி 2020, தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிச்சூழல் சட்ட தொகுப்பு 2020 ஆகிய 4 சட்ட தொகுப்புகளும் 5 ஆண்டு காத்திருப்புக்குப் பிறகு கடந்த 2025 நவம்பர் 21ல் அமலுக்கு வந்தன.
இந்நிலையில், 4 புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகளின் விதிகளை ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தொழிலாளர் சட்ட தொகுப்புகளை முழுமையாக செயல்படுத்தப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு அதிகாரிகள் தெரிவிதுள்ளனர். இந்த சட்ட தொகுப்பு அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச சம்பளம், உரிய நேரத்தில் சம்பளம் பட்டுவாடா செய்வதை உறுதிபடுத்துவதோடு, தொழிற்சங்க விதிகளில் முக்கிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. தொழிலாளர் சட்டம் பொதுப் பிரிவில் வருவதால், நாடு முழுவதும் விதிகளை அமல்படுத்த, ஒன்றிய அரசை பின்பற்றி, மாநில அரசுகளும் அந்தந்த மாநிலங்களுக்கான 4 சட்ட தொகுப்புகளின் விதிகளை அறிவிக்க வேண்டும்.
