புதுடெல்லி: பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சி அமைச்சராக உள்ள சஞ்சீவ் அரோரா பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் ஆம் ஆத்மி அரசின் தொழில் துறை அமைச்சர் சஞ்சீவ் அரோரா. புதிதாக பதிவு செய்யப்பட்ட பண மோசடி விசாரணையின் ஒரு பகுதியாக பஞ்சாப் அமைச்சர் அரோரா மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் என கருதப்படும் நபர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது.
சண்டிகரில் உள்ள சஞ்சீவ் அரோராவின் இல்லத்திலும் நேற்று சோதனைகள் நடந்தன. அதே போல் ஹாம்ப்டன் ஸ்கை ரியாலிட்டி லிமிடெட் என்ற கம்பெனியின் டெல்லி, குருகிராம் அலுவலகங்களில் சோதனைகள் நடந்தன. சஞ்சீவ் அரோரா தனது நிறுவனத்தின் மூலம் டெல்லியை தளமாக கொண்ட செயல்படாத போலியான நிறுவனங்களிடம் இருந்து ரூ.100 கோடிக்கும் அதிக மதிப்புள்ள செல்போன்களுக்கு மோசடியான கொள்முதல் ரசீதுகளை உருவாக்கியதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த போலி பரிவர்த்தனைகள், முறையற்ற உள்ளீட்டு வரி வரவு, ஏற்றுமதி வரவுகள், சுங்க வரி தள்ளுபடிகள் மீதான சரக்கு மற்றும் சேவை பணத்தை திரும்ப பெறுவதற்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சட்டவிரோத நடவடிக்கையினால் அரசு கருவூலத்துக்கு கணிசமான நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். சண்டிகரில் உள்ள சஞ்சீவ் அரோராவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனைகளைத் தொடர்ந்து, அவர் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த விசாரணையின் போது அமைச்சர் சஞ்சீவ் ஒத்துழைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கைது, பஞ்சாப் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆம் ஆத்மி கட்சி இது ஒன்றிய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என குற்றம் சாட்டியுள்ளது.
* கெஜ்ரிவால் கண்டனம்
அமைச்சர் கைது செய்யப்பட்டதற்கு ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இந்த அடக்குமுறை கட்சிக்கு அரசியல் ரீதியாக பாதகமாக அமையும். அமலாக்கத்துறை சோதனைகள் குறித்த விவாதங்கள் பஞ்சாபில் உள்ள ஒவ்வொரு வீட்டையும் எட்டியுள்ளது. மாநிலத்தின் மீதான மத்திய அரசின் அணுகுமுறையால் பாஜ தொண்டர்கள் உட்பட மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். நீங்கள் கைது செய்பவர்கள் நான்கு நாட்களில் சிறையிலிருந்து வெளியே வந்துவிடுவார்கள். ஆனால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு பாஜவால் பஞ்சாபிற்குள் நுழைய முடியாது என்றார்.
