புதுடெல்லி: நாட்டின் அடுத்த பாதுகாப்பு படை தலைமை தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்ரமணி மற்றும் கடற்படை தளபதியாக கிருஷ்ணா சுவாமிநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2024ம் ஆண்டு ஜூன் மாதம் வரை மத்திய பிராந்திய கமாண்டிங்-இன்-சீப் அதிகாரியாக பணியாற்றிய லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்ரமணி, பின்னர் 2024ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் 2025ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி வரை ராணுவத்தின் துணை தளபதியாக பதவி வகித்தார். இதனைத் தொடர்ந்து, 2025ம் ஆண்டு செப். 1ம் தேதி முதல் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராக பணியாற்றி வருகிறார். தற்போது பணியில் உள்ள பாதுகாப்பு படை தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான், வரும் 30ம் தேதியுடன் தனது பணிக்காலத்தை நிறைவு செய்ய உள்ளார்.
இந்த நிலையில், ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்ரமணியை அடுத்த பாதுகாப்பு படை தலைமை தளபதியாக (சி.டி.எஸ்.) நியமித்து ஒன்றிய அரசு நேற்று உத்தரவிட்டது. அவர் பொறுப்பேற்கும் தேதியிலிருந்து அடுத்த உத்தரவு வரும் வரை ராணுவ விவகாரங்கள் துறையின் ஒன்றிய அரசின் செயலாளராகவும் செயல்படுவார். பி.வி.எஸ்.எம்., ஏ.வி.எஸ்.எம்., எஸ்.எம்., வி.எஸ்.எம். ஆகிய உயரிய விருதுகளை பெற்றுள்ள இவர், நாட்டின் ராணுவ வியூகம் மற்றும் நிர்வாகத்தில் நீண்ட அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1968ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி மும்பையில் பிறந்த இவர், தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பதோடு சென்னை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வுகளில் ஆய்வியல் முனைவர் பட்டம் பெற்றவர் ஆவார். இவரது மனைவி சுனிதா திவேதி சமூக பணிகளில் ஆர்வம் கொண்டவர் ஆவார். இதேபோல், இந்திய கடற்படையின் அடுத்த தளபதியாக கர்நாடகாவை சேர்ந்த வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது மும்பையில் உள்ள மேற்கு கடற்படை கமாண்டராக இருக்கும் இவர், வரும் 31ம் தேதி புதிய கடற்படை தளபதியாக பொறுப்பேற்கிறார்.
இவரது பணிக்காலம் 2028ம் ஆண்டு டிச. 31ம் தேதி வரை இருக்கும். 1987ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி கடற்படையில் இணைந்த இவர், தகவல் தொடர்பு மற்றும் மின்னணு போர் முறையில் நிபுணத்துவம் பெற்றவர். இவர் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் பிரிட்டன், அமெரிக்காவின் கடற்படை போர் கல்லூரிகளில் பயின்றவர் ஆவார்.
