வேலையற்ற இளைஞர்களுக்கு பாஜவின் பதில் தடியடிகளே: ராகுல் காந்தி விமர்சனம்

 

புதுடெல்லி: ‘இந்தியாவில் வேலையின்மைதான் மிகப்பெரிய நோய். வேலையில்லாத இளைஞர்களுக்கு பாஜ அளிக்கும் பதில் தடியடிகளே’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பீகார் தலைநகர் பாட்னாவில் வேலைவாய்ப்பு கோரி போராடிய இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தும் வீடியோவை, தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

பாட்னாவில் வேலைவாய்ப்புக்கான தங்கள் உரிமையை கோரி அமைதியாக போராடிய ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள், பீகார் காவல்துறையினரால் மீண்டும் ஒருமுறை கொடூரமாக தாக்கப்பட்டனர். வேலையற்ற இளைஞர்களுக்கு பாஜகவின் பதில் தடியடிகள். இன்று இந்தியாவில் வேலையின்மைதான் மிகப்பெரிய நோயாக உருவெடுத்துள்ளது. அதன் மிக மோசமான தாக்கம் பீகார் மற்றும் உத்தரப்பிரதேச இளைஞர்கள் மீது அதிகம் விழுகிறது. பட்டங்களையும் திறன்களையும் கையில் ஏந்தியபடி, லட்சக்கணக்கான இளைஞர்கள் அலைந்து திரிகின்றனர். ஆனால் பாஜ அரசு அவர்களை சற்றும் பொருட்படுத்துவதில்லை.

இளைஞர்கள் தங்கள் உரிமைகளைக் கோரி வீதிகளில் இறங்கிப் போராடும்போது, அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவதில்லை. மாறாக, முதுகில் தடியடிகள் சரமாரியாகப் பொழியப்படுகின்றன. பாஜகவின் பொய்களைக் கேட்டு இந்தியாவின் இளைஞர்கள் சலிப்படைந்துவிட்டனர்; அவர்கள் இனிமேலும் அமைதியாக இருக்கப்போவதில்லை. ஒவ்வொரு கட்டத்திலும் காங்கிரஸ் கட்சி அவர்களுக்குத் துணையாக நிற்கும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories: