ஊட்டி, மே 9: தமிழக கவர்னரை கண்டித்து ஊட்டியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மற்றும் தவெகவினர் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் எந்த ஒரு கட்சிகளுக்கும் அருதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில், 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக., ஆட்சி அமைக்க கவர்னரிடம் அனுமதி கோரியது. ஆனால், முழு பெரும்பான்மையுடன் வந்து ஆட்சி அமைக்க வேண்டும் என தவெக.,விற்கு கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தவெக.,விற்கு ஆதரவு அளித்த போதிலும், போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில், தங்களை ஆட்சி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று ஊட்டியில் காங்கிரஸ் மற்றும் தவெக.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டியில் உள்ள மார்க்கெட் தபால் நிலையம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். இதில், ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தவெக.,வினர் கலந்து கொண்டு தமிழக கவர்னரையும்,ஒன்றிய பாஜக., அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தவெக.,வினரை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தால், ஊட்டி அப்பர்பஜார் சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
