தேர்தல் அறிவிப்பு எதிரொலி தலைவர்கள் சிலைகளுக்கு ‘சீல்’

நெல்லை, மார்ச் 1: தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து  நெல்லை மாநகரில் உள்ள தலைவர்கள் சிலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு வருகிற ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 27ம் ேததி மத்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து அன்றுமுதல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனைத்தொடர்ந்து நடத்தை விதிகளை தீவிரமாகச் செயல்படுத்தும் பணியில் மாநகர், மாவட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒருபகுதியாக நெல்லை மாநகரில் உள்ள தலைவர்கள் சிலைகளை மறைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர். நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள அண்ணா சிலை, கொக்கிரகுளம் எம்ஜிஆர் சிலை உள்ளிட்ட அனைத்து தலைவர்களின் சிலைகளும்  மூடி மறைக்கப்பட்டன மேலும் எம்ஜிஆர் சிலை தொகுதியிலுள்ள இரட்டை இலை சின்னமும் மறைத்து கட்டப்பட்டது. இப்பணிகளை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். இதனிடையே கட்சிக்கொடி கட்டியவண்ணம் கார்களில் செல்வதற்கும் தடை விதித்துள்ள அதிகாரிகள், கட்சிக் கொடிகள் கட்டிச்செல்லும் கார்களை தடுத்து நிறுத்தி காரில் இருந்து கொடிகளை அகற்ற  அறிவுறுத்தினர். இதே போல் மாநகரில் ஆங்காங்கே கட்சிக் கொடிகள், பேனர்கள் போஸ்டர்களை அகற்றும்பணியும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் அரசியல் கட்சிகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: