போடியில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகன சோதனை வீடியோ கேமரா மூலம் பதிவு செய்கின்றனர்

போடி, மார்ச் 1: சட்டமன்ற தேர்தலையொட்டி, போடியில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று சோதனை நடத்தினர். இதை வீடியோ கேமரா மூலம் பதிவு செய்து வருகின்றனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்.6ல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பை கடந்த 26ம் தேதி, தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அப்போது முதல் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதனைத் தொடர்ந்து கட்சிக் கொடிகள் அவிழ்ப்பு, கொடிக்கம்பங்களை மறைத்தல், அரசு அலுவலகங்களில் முதல்வர் புகைப்படங்கள் அகற்றுதல், கட்சிகளின் பேனர்களை அவிழ்த்தல் ஆகிய பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில், போடி சட்டமன்றத் தொகுயில் பறக்கும் படை அலுவலர் தேவேந்திரன் தலைமையில், போலீசார் வாகனங்களில் சோதனை செய்து, அவற்றை வீடியோ கேமரா மூலம் பதிவு செய்து வருகின்றனர். போடியில் பஸ்நிலையம், தேவர் சிலை, வள்ளுவர் சிலை, கட்டபொம்மன் சிலை, வஉசி சிலை, காமராஜர் சிலை ஆகிய பகுதிகளிலும், சுற்றியுள்ள கிராமங்களிலும் பறக்கும் படையினர் ரோந்து சென்று வாகன சோதனை நடத்தி வருகின்றனர். வாகனங்களை வழிமறித்து பின்புறம் டிக்கியை திறந்து சோதனை செய்து அனுப்பி வருகின்றனர். நேற்று காலை முதல் மாலை வரை நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் சோதனை செய்தனர். மேலும், போடி சட்டமன்ற தொகுதியில் அதிமுகவினர் சேலை, வேட்டி வழங்கல், பணம் விநியோகம் ஆகியவற்றை கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: