மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அருகே இருளர்களின் 5 குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்து சேதமானது. இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தொண்டு நிறுவனம் நிவாரண உதவி வழங்கியது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த அம்மணம்பாக்கம் ஊராட்சியில் இருளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் திடீரென குடிசை வீட்டில் தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று வீசியதால் பக்கத்து குடிசைகளுக்கும் தீ பரவி, 5 குடிசை வீடுகளும் கொழுந்துவிட்டு எரிய துவங்கியது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பகுதி மக்கள் உடனடியாக அச்சிறுப்பாக்கம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், தண்ணீர் பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருந்தபோதிலும் 5 குடிசை வீடுகளும் எரிந்து சாம்பலானது. வீடுகளில் இருந்த துணிமணிகள், பாத்திரங்கள், பணம் உள்ளிட்டவை எரிந்து நாசமானது. இதனால் இருளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வீடுகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இதையறிந்து சம்பவ இடத்துக்கு வந்த செய்யூர் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பாதிக்கப்பட்ட இருளர்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினர். இதைத்தொடர்ந்து காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் கண்காணிப்பக தொண்டு நிறுவனம் சார்பில், 5 இருளர் குடும்பத்தினருக்கும் அரிசி, மளிகை பொருட்கள், தார்பாய், பெட்ஷீட் மற்றும் பிஸ்கட் போன்றவை வழங்கப் பட்டது. இதில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரமேஷ் குமார், குழந்தைகள் கண் காணிப்பக நிர்வாகி ராஜி, செய்யூர் வருவாய் துறை அதிகாரிகள், ஊராட்சி மன்ற நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
