புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட்டையில், மார்ச் 2, 2024 அன்று 9 வயது சிறுமி கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு, உடலை வாய்க்காலில் வீசிய கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து கருணா (எ) கருணாஸ் (18), விவேகானந்தன் (56) ஆகிய இருவரை கைது செய்தனர். இதில் விவேகானந்தன் கடந்த 2024 செப்டம்பர் மாதம் சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.
இந்த வழக்கு புதுச்சேரி போக்சோ (POCSO) விரைவு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சுமதி முன்னிலையில் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 30-ம் தேதி, இவ்வழக்கில் கருணாஸ் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் நேற்று காலை 11.30 மணிக்கு இறுதிகட்ட வாதம் நடைபெற்றது.
இவ்வழக்கு அரிதினும் அரிதான வழக்குகளில் ஒன்றாகக் கருதப்பட்டு, குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் 20 பக்க எழுத்துப்பூர்வமான வாதத்தை முன்வைத்தார். தொடர்ந்து இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி சுமதி, குற்றவாளிக்கான தண்டனை விவரம் மே 8ஆம் தேதி அறிவிக்கப்படும் என கூறி ஒத்தி வைத்தார். இதனையடுத்து இன்று குற்றவாளி கருணாஸுக்கு மரண தண்டனை அறிவித்ததுடன், சிறுமியின் குடும்பத்துக்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
