கோவை, ஏப். 30: கோவை பீளமேட்டில் வியாபாரி வீட்டில் நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோவை பீளமேடு சித்ரா பூங்கா நகரை சேர்ந்தவர் ஆண்டவன் (40). இவர், தள்ளுவண்டியில் பஜ்ஜி, போண்டா வியாபாரம் செய்து வருகிறார்.
கடந்த 27ம் தேதி மாலை வீட்டை பூட்டி விட்டு வியாபாரம் செய்ய சென்றார். பின்னர் இரவில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 6 3/4 பவுன் தங்க நகையை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
மேலும், அந்த பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்தனர். அதில், நகையை திருடி சென்றது சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த தினேஷ்குமார் (26) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
