ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்தது. இதில் ஆம்பூர் சதொகுதியில் பதிவான வாக்குகள் 22 சுற்றுகளாக எண்ணப்பட்டது. இதில் 21 சுற்றுகள் முடிந்த நிலையில், திமுக வேட்பாளர் வில்வநாதன் 72,340 வாக்குகளும், தவெக வேட்பாளர் இம்தியாஸ் 64,742 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் வெங்கடேசன் 44,832 வாக்குகளும் பெற்றிருந்தனர். 7598 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வில்வநாதன் முன்னிலையில் இருந்தார்.
இரவு 7.30 மணியளவில் இறுதிச்சுற்று வாக்கு எண்ணிக்கையின்போது 2 இயந்திரங்களில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இயந்திரங்களில் பழுதை சரிசெய்ய முடியவில்லை என்பதால், விவிபேட் இயந்திரத்தில் உள்ள வாக்குச்சீட்டுகள் இரவு 8.15 மணியளவில் முகவர்கள் முன்னிலையில் எண்ணப்பட்டது. அதில் திமுக வேட்பாளர் வில்வநாதன் 73,187 வாக்குகள் பெற்று 7,327 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
