சென்னை: சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக ேவட்பாளரான துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளரை காட்டிலும் 7,140 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார். சென்னை மாவட்டத்தில் உள்ள சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தவெக சார்பில் டி.செல்வம், அதிமுக சார்பில் ஆதிராஜாராம், நாம் தமிழர் கட்சி சார்பில் ஆயிஷா உள்பட 25 பேர் போட்டியிட்டனர்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தபால் ஓட்டில் முன்னிலை பெற்றார். அதன் பிறகு வாக்கு பதிவு இயந்திரம் எண்ணிக்கை தொடங்கியதும் முதல் 4 சுற்றில் முன்னிலை வகித்தார் உதயநிதி ஸ்டாலின். ஆனால், அடுத்தடுத்த சுற்றுகளில் தவெக வேட்பாளர் டி.செல்வம் முன்னிலை பெற்றார். இருந்தாலும், திமுக வேட்பாளரான உதயநிதி ஸ்டாலின் கடும் போட்டிக்கு இடையே தவெக வேட்பாளரை பின்னுக்கு தள்ளி முன்னிலை வகித்தார்.
கடைசியாக 17வது சுற்றில் உதயநிதி ஸ்டாலின் 62,992 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளரை விட 7,140 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக வேட்பாளரான ஆதிராஜராம் வெறும் 16,507 வாக்குகள் மட்டும் பெற்று டெபாசிட் இழந்தார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் 2,971 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வியடைந்தனர்.
* நோட்டாவிடம் தோற்ற 22 சுயேச்சை வேட்பாளர்கள்
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளரான துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 7,140 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக, அதிமுக, நாம் தமிழர் கட்சியை தவிர நோட்டா 643 வாக்குகள் பெற்றிருந்தது. இதையடுத்து இந்த தொகுதயில் போட்டியிட்ட 22 சுயேச்சை வேட்பாளர்கள் அனைவரும் நோட்டா பெற்ற வாக்குகளை காட்டிலும் மிக குறைவான வாக்குகள் பெற்று தோல்வியடைந்தனர்.
