இன்று வாக்கு எண்ணிக்கை மே.வங்கம், அசாம், கேரளாவில் ஆட்சி அமைக்க போவது யார்?

கொல்கத்தா: தமிழ்நாடு, புதுச்சேரியுடன் சட்டப்பேரவை தேர்தல் நடந்த மேற்கு வங்கம், அசாம், கேரளத்திலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்த தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம், கேரளம் ஆகிய 5 மாநிலத்திலும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் 294 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் 2 கட்டங்களாக கடந்த ஏப்ரல் 23 மற்றும் 29ம் தேதிகளில் நடந்தது. இதில் வரலாறு காணாத வகையில் 92.47 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. வாக்குப்பதிவின் போதே பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடந்ததால், பாதுகாப்பு காரணங்களாக வாக்கு எண்ணும் மையங்களின் எண்ணிக்கை 77 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அங்கும் மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பால்டா தொகுதியில் முறைகேடுகள் காரணமாக வரும் 21ம் தேதி மறுதேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் 293 தொகுதிகளில் பதிவான வாக்குகள் மட்டும் இன்று எண்ணப்பட உள்ளது. இதில், திரிணாமுல் காங்கிரசின் மம்தா 4வது முறையாக ஆட்சி அமைக்கப் போகிறாரா அல்லது பாஜ முதல் முறையாக மேற்கு வங்கத்தை கைப்பற்றப் போகிறதா என பலத்த எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன. 126 தொகுதிகளை கொண்ட அசாமில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் பாஜ 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறியிருக்கின்றன.

கேரளாவில் 140 தொகுதிகளுக்கு 883 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இதில் இடதுசாரிகளை வீழ்த்தி காங்கிரஸ் கூட்டணி இம்முறை ஆட்சியை கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் கூறி உள்ளன. இவ்விரு மாநிலத்திலும் யார் ஆட்சியை கைப்பற்றுவார்கள் என்பதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. காலை 10 மணி முதல் முன்னிலை நிலவரங்கள் வெளியாகத் தொடங்கும்.

Related Stories: