இணக்கமாக இருந்தால் வெகுமதி பாஜ ஆட்சியில் சுதந்திரமான பத்திரிகை தண்டிக்கப்படுகிறது: மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி: உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் கார்கே எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிட்டுள்ளதாவது: 2014-ம் ஆண்டு முதல் உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியாவின் நிலை சீராக சரிந்து வருகிறது. செய்தி அறைகளை அமைதியாக்குவதற்காக சங் பரிவார் சட்ட கட்டமைப்புகளை அதிகளவில் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2014ம் ஆண்டு முதல் பாஜ ஆட்சியின் கீழ், உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியாவின் நிலை சரிந்து, 157-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

சங் பரிவார், செய்தி அறைகளை அமைதியாக்குவதற்காக சட்டக் கட்டமைப்புகளை அதிகளவில் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது. அவதூறு சட்டங்கள், தேசியப் பாதுகாப்பு விதிகள் மற்றும் விரிவான குற்றவியல் சட்டங்கள் ஆகியவை நீதியின் கருவிகளாகப் பயன்படுத்தப்படாமல், அச்சுறுத்தலின் கருவிகளாகவே பயன்படுத்தப்படுகின்றன. 2014 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் 36 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

உபா போன்ற கடுமையான சட்டங்களின் கீழ் பல பத்திரிகையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜ ஆளும் மாநிலங்களில் பத்திரிகையாளர்கள் தங்கள் பணியைச் செய்ததற்காக கொல்லப்படுகிறார்கள். பாஜ-ஆர்எஸ்எஸ்சின் செய்தி தெளிவாக உள்ளது; சுதந்திரமான பத்திரிகை தண்டிக்கப்படும், கீழ்ப்படிபவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும். ஊடகத்தின் சில பிரிவுகள் ஆளும் தரப்பின் கருத்துக்களை எதிரொலிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: