குமரியில் வன விலங்குகள் கணக்கெடுப்பு தொடங்கியது

நாகர்கோவில், பிப்.26: குமரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க கல்லூரி மாணவ, மாணவியர் உள்பட 104 தன்னார்வலர்கள் முன்பதிவு செய்திருந்தனர். அவர்களுக்கு கணக்கெடுப்பது பற்றிய பயிற்சி வடசேரியில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் நடத்தப்பட்டது. பின்னர் அவர்கள் நேற்று முன்தினம் மாலை கணக்கெடுப்பு நடைபெறுகின்ற பகுதிகள் அருகே அழைத்து செல்லப்பட்டிருந்தனர்.

நேற்று காலை முதல் கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. தொடர்ந்து பூதப்பாண்டி, அழகியபாண்டியபுரம், வேளிமலை, களியல், குலசேகரம் ஆகிய வனசரக பகுதிகளில் உள்ள 26 பீட்களில், ஒரு பீட்டிற்கு தலா 4 பேர் வீதம் குழுக்கள் அமைக்கப்பட்டு கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். ரேஞ்சர் திலீபன், உதவி வன அலுவலர் சிவகுமார், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் மேற்பார்வையில் இந்த கணக்கெடுப்பு நடைபெறுகிறது. மொத்தம் 150 பேர் வரை இந்த கணக்கெடுப்பில் ஈடுபடுகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேரில் பார்த்தல், வனவிலங்குகளின் காலடித் தடம், லத்தி ஆகியவற்றின் அடிப்படையிலும் வன விலங்குகள் எண்ணிக்கை கணக்கெடுக்கப்படுகிறது. தற்போது ஜிபிஎஸ் கருவி மற்றும் டிரோன் கேமராக்களும் பயன்படுத்தப்படுகிறது. கணக்கெடுப்பு காலை மற்றும் மாலை வேளைகளில் மட்டும் நடத்தப்படுகிறது.

Related Stories: