தாளவாடி அருகே தோட்டத்திற்குள் புகுந்து வீட்டின் கூரையை சேதப்படுத்திய யானை

சத்தியமங்கலம்,பிப்.26: தாளவாடி மலைப்பகுதியில் ஒற்றையானை கிராமத்திற்குள் புகுந்து தோட்டத்தில் இருந்த வீட்டை சேதப்படுத்தியதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மலை கிராமங்களை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் வசிக்கும் காட்டு யானைகள் இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறி கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள விளை பொருட்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தாளவாடி அடுத்துள்ள ஜீரகள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஜோரை ஒசூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை மாதகள்ளி பகுதியிலுள்ள விவசாயி சிவப்பா என்பவரது தோட்டத்தில் உள்ள பலா மரத்தில் காய்கள் காய்த்து தொங்குவதால் தின்பதற்காக வந்தது. அப்போது அவரது தோட்டத்தில் உள்ள வீட்டின் சிமெண்ட் கூரையை ஒற்றை யானை தனது தும்பிக்கையால் பிடித்து உடைத்து சேதப்படுத்தியது. தோட்டத்தில் உள்ள வீட்டில் யாரும் வசிக்காத நிலையில் வீட்டை சேதப்படுத்திய யானை வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

இந்நிலையில் நேற்று காலை விவசாய தோட்டத்திற்கு சென்ற சித்தப்பா தனது தோட்டத்தில் உள்ள வீட்டை யானை சேதப்படுத்தியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு சென்ற ஜீரகள்ளி வனச்சரகர் முத்து மற்றும் வனத்துறை ஊழியர்கள் சேதமடைந்த வீட்டை பார்வையிட்டனர்.

யானைகள் அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறி விவசாய விளை நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்வதால் ஏற்கனவே யானைகள் வராமல் தடுக்க வெட்டப்பட்ட அகழியை ஆழப்படுத்துவதோடு, அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாளவாடி மலைப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: