போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் மாவட்டத்தில் குறைந்தளவில் பஸ்கள் இயக்கம்: பயணிகள் கடும் அவதி

திருவள்ளூர், பிப். 26: தமிழக அரசுடன் நடத்திய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து, நேற்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தமிழகம் முழுவதும் துவக்கியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் விழுப்புரம் கோட்டம் சார்பில், திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை, பொதட்டுர்பேட்டை ஆகிய பகுதிகளில் பஸ் டெப்போக்கள் உள்ளன. இங்கிருந்து தினமும் பல்வேறு பகுதிகளுக்கு 224 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், 14 பஸ்கள் இயங்கியதாக போக்குவரத்து நிர்வாகம்

தெரிவித்துள்ளது.

இதேபோல், மாதவரம், பாடியநல்லூர், எண்ணூர், அம்பத்தூர், பூந்தமல்லி, ஆவடி, அய்யப்பன்தாங்கல், திருவொற்றியூர் ஆகிய டெப்போக்களில் இருந்து 951 மாநகர பஸ்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்தன. ஆனால், ஒரு மாநகர பஸ் கூட திருவள்ளூருக்கு வரவில்லை. இதனால் திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உட்பட பல்வேறு பகுதிகளில் பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முறியடிக்க அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதிமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த ஓட்டுனர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஓட்டுனர்களை கொண்டும் எப்படியேனும் பஸ்களை இயக்கி விடலாம் என அதிமுக அரசு கங்கணம் கட்டி கொண்டு செயல்பட்டது.

ஆனால், அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த பலர், இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பணிக்கு வராததால் திருவள்ளூர் மாவட்டத்தில் 90 சதவிகித பஸ்கள் இயங்கவில்லை. இதனால் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் அவதிக்கு ஆளாகினர். கடம்பத்தூர், திருவள்ளூர், புட்லூர், செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, திருநின்றவூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் கூட்டம் அளவுக்கு அதிகமாக காணப்பட்டது. இதனால், அரக்கோணம், திருவள்ளூரில் இருந்து சென்ட்ரல், கடற்கரை செல்லும் அனைத்து மின்சார ரயில்களிலும் நேற்று வழக்கத்துக்கு மாறாக, அதிகளவில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.

ஒரே நேரத்தில் மக்கள் கூடியதால், டிக்கெட் எடுப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் எடுத்தனர். இதனால் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் மக்கள் தவித்தனர். அம்பத்தூர்: அம்பத்தூர் தொழிற்பேட்டை பணிமனையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு தினமும் 142 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று 8 மணி நிலவரப்படி 51 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. ஆவடி பணிமனையில் உள்ள 137 பஸ்களில் 53 பஸ்கள்தான் இயக்கப்பட்டன.

இதனால் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள் அவதிப்பட்டனர். ஷேர் ஆட்டோக்களில் வழக்கத்தைவிட 2 மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் ஏழை மக்கள் செல்ல முடியாமல் வீடு திரும்பினர். இன்று முகூர்த்தநாள் என்பதால் திருமணத்துக்கு சென்றவர்களும் பஸ் கிடைக்காமல் கடும் ஏமாற்றம் அடைந்தனர். ஆவடி; ஆவடி பணிமனையில் இருந்து திருவள்ளூர், வேலூர், பெரும்புதூர், பெரியபாளையம், ஆரணி, ஊத்துக்கோட்டை மற்றும் காஞ்சிபுரத்துக்கு பஸ்கள் இயக்கப்படாததால் கிராமங்களில் இருந்து சென்னை பகுதிகளுக்கு வேலைக்கு வரமுடியவில்லை. அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு தொழிலாளர்கள் வராததால் பணிகள் முடங்கியது.

பூந்தமல்லி: அய்யப்பன்தாங்கல், பூந்தமல்லி பணிமனைகளில் 35 முதல் 40 சதவீதம் வரை பஸ்கள் இயக்கப்பட்டன. அய்யப்பன்தாங்கலில் உள்ள 100 பஸ்களில் 42 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. பூந்தமல்லி பணிமனையில் 135 பஸ்களில் 49 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.பொன்னேரி பணிமனையில் இருந்து இயக்கப்படும் 43 பேருந்துகளில்  6  பேருந்துகள் மட்டுமே இயங்கின. இதன் காரணமாக பேருந்துகள் அனைத்தும்  பணிமனையிலே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பேருந்து நிலையமும் வெறிச்சோடி காணப்பட்டது. தனியார் பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்பட்டு வருகின்றன.  

ஒருசில பேருந்துகள் மட்டுமே இயங்கியதால் பொதுமக்கள் மிகுந்த அவதி  அடைந்தனர். ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை போக்குவரத்து பணிமனையில் இருந்து மொத்தம் 37 பஸ்களில், 14 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து மாநகர பஸ்கள் 40 பஸ்களுக்கு பதிலாக, 4 பஸ்களே இயக்கப்பட்டன. இதனால், ஊத்துக்கோட்டை, பெரிய பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு செல்லக்கூடிய மக்கள் கடும் அவதிப்பட்டனர். மேலும், ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு சென்ற பஸ்களில் பயணிகள் முண்டியடித்து சென்றனர். பெரும்பாலான இடங்களில் பஸ்கள் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர்.

Related Stories:

>