சென்னை: தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு இன்று சென்னை, கலைவாணர் அரங்கில் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 23ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்படி, தமிழகம் முழுவதும் 75,064 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குகள் அனைத்தும் 62 வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள மையங்களுக்கு துணை ராணுவ வீரர்கள், தமிழக போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கி வருகிறார்கள்.
தமிழகத்தில் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி காலை 8 மணிக்கு எண்ணப்படுகிறது. வாக்குகள் எண்ணும் வழிமுறைகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறும்போது, “தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 4ம் தேதி (திங்கள்) அன்று 62 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறவுள்ளது. வாக்குகள் எண்ணும் பணி சரியாக காலை 8 மணிக்கு துவங்கும். முதலில் காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கும். 30 நிமிடங்களுக்கு பிறகு, அதாவது காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணும் பணி துவங்கும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளை எண்ணும் சுற்றுகளில், கடைசி சுற்று வாக்குகள் எண்ணும் பணி, தபால் வாக்குகள் எண்ணும் பணி முடிக்கப்பட்டவுடன்தான் துவங்கப்படும். ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் ஒரு பகுதியில் தபால் வாக்குகளும், மற்றொரு பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளும் அதற்குரிய மேஜைகளில் எண்ணப்படும். 500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேசை என்ற விகிதத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும்” என்று கூறினார்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் 62 வாக்குப்பதிவு மையங்களில், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் தேர்தல் அலுவலர்களுக்கு (ஆர்ஓக்கள்) சென்னை, கலைவாணர் அரங்கில் தேர்தல் ஆணையம் சார்பில் இன்று சிறப்பு பயிற்சி வழக்கு நடத்தப்பட உள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் இருந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள், தேர்தல் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த பயிற்சி வகுப்பின்போது, தபால் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் எப்படி செயல்பட வேண்டும், தபால் வாக்குகள் பராமரிப்பு மற்றும் படிவங்களை முறையாக பராமரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும். இதைதொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளை எண்ணுவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஒரு வாக்குப்பதிவு மையத்தில் குறைந்தபட்சம் 14 மேஜைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி-யில் பதிவு செய்து, ஒரு சுற்று வாக்கு முடிந்த பிறகே சிறப்பு பார்வையாளர் முன்னிலையில் ஒவ்வொரு கட்சி வேட்பாளரும் பெற்ற வாக்குகளை அறிவிப்பது உள்ளிட்ட பல முக்கிய தகவல்கள் குறித்து இன்று பயிற்சி அளிக்கப்படும். இதை தொடர்ந்து நாளை (30ம் தேதி) சென்னையில், ரிப்பன் மாளிகையிலும், மற்ற மாவட்டங்களில் அந்தந்த கலெக்டர் அலுவலகங்களிலும் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தலைமையில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் மற்ற ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
