கொடைக்கானல்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், குடும்பத்தினருடன் ஓய்வெடுப்பதற்காக திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு 4 நாள் பயணமாக கடந்த ஏப்.25ம் தேதி வருகை தந்தார். கடந்த 2 நாட்களாக காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் உற்சாகமாக அவருடன் புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். நகரில் உள்ள நட்சத்திர ஏரிப்பகுதியில் நேற்று காலை வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸ் முதல் 13 டிகிரி செல்சியஸ் வரை நிலவியது. இதனால், ஏரியின் மேற்பரப்பில் நீர்ப்பனி படர்ந்து காணப்பட்டது.
இதை பார்த்து ரசித்தவாறு ஏரிச்சாலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டார். முதல்வரை காண அதிகாலையிலேயே ஏராளமான சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் ஏரி பகுதியில் காத்திருந்தனர். அவர்களுடன் கலந்துரையாடியபடியே முதல்வர் சுமார் 2 கிமீ தூரம் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் முதல்வருடன் செல்பி, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதை தொடர்ந்து முதல்வர் ஏரியை சுற்றி சுமார் ஒரு கிமீ தூரம் சைக்கிள் ஓட்டினார். இதை சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் ஏரிச்சாலையில் இருந்தவாறு கண்டு ரசித்தனர்.
* மாற்றுத்திறனாளியுடன் செல்பி மலைப்பூண்டு வழங்கிய பெண்
முதல்வர் நடைப்பயிற்சி செய்த போது மாற்றுத்திறனாளி ஒருவர் தனது மூன்று சக்கர வாகனத்தில் சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தார். தன்னுடன் புகைப்படம் எடுத்து கொள்ள அவர் முயற்சி செய்ததை அறிந்த முதல்வர், அவரை சந்தித்து கைகுலுக்கி, அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் முதல்வரிடம், புகைப்படம் எடுத்து கொண்ட குடும்பத்தினருடன் வந்த சிறுமி ஒருவர், ‘ஸ்டாலின் தொடரட்டும்… தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற பாடலை தனது மழலை குரலில் பாடினார். இதை கண்டு ரசித்த முதல்வர், சிறுமியின் கன்னத்தை தட்டிக் கொடுத்து தனது பாசத்தை வெளிப்படுத்தினார். பின்னர் முதல்வர் ஏரிச்சாலை அருகே அமைந்துள்ள விண்டேஜ் அருங்காட்சியகத்திற்கு சென்று மிகவும் பழமையான பொருட்களை பார்த்து ரசித்தார். குறிப்பாக அங்கிருந்த மிகவும் பழமையான கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்களையும் கண்டு ரசித்தார். மேலும் பெண் ஒருவர் கொடைக்கானலின் தங்கம் என அழைக்கப்படும் புவிசார் குறியீடு பெற்ற மலைப்பூண்டுவை முதல்வருக்கு பரிசாக வழங்கினார்.
* முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு
கொடைக்கானலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்கியுள்ள விடுதிக்கு நேற்று அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி மற்றும் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ உள்ளிட்டோர் வந்தனர். அங்கு முதல்வரை சந்தித்து தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினர். பின்னர் புறப்படும் போது அமைச்சர் ஐ.பெரியசாமி கூறுகையில், வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடந்தததாக என் மீது அமலாக்கதுறை தொடர்ந்த வழக்கு பொய்யானது என்று கூறி நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதன்மூலம் நீதி வென்றுள்ளது. திமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 2வது முறையாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்றார்.
