திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் நேற்று அதிகாலை தவெக தலைவர் விஜய், விஸ்வரூப தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை விக்கிரவாண்டி மாநாட்டில் தொடங்கினார் நடிகர் விஜய். இவரது கட்சி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 233 தொகுதிகளில் போட்டியிட்டது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேச்சை வேட்பாளருக்கு தவெக ஆதரவு அளித்தது.
இந்நிலையில் கடந்த 23ம் தேதி தேர்தல் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீர் பயணமாக சென்னையில் இருந்து தனி விமானத்தில் மதுரைக்கு வந்த விஜய், அங்கிருந்து நேராக காரில் திருச்செந்தூருக்கு புறப்பட்டார். அதிகாலை 4 மணிக்கு கடற்கரையில் உள்ள தனியார் விடுதிக்கு வந்த அவர், சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்னர், விடுதியில் இருந்து காரில் கோயில் வளாகத்திற்கு வந்திறங்கி அங்கிருந்து பேட்டரி காரில் கடற்கரை வாசலுக்கு வந்தார். கடலில் காலை நனைத்த அவர், கோயிலுக்குள் சென்றார்.
கோயில் சண்முக விலாச மண்டபத்தில் விஜய்க்கு அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதையும், ஒரு வேலும் வழங்கினர். அந்த வேலை கையில் பிடித்தவாறு நேரடியாக மூலவர் சன்னதி முன்பு உட்கார்ந்து கோயிலின் முதல் தரிசனமான விஸ்வரூப தரிசனத்தில் முருகப்பெருமானை பயபக்தியுடன் தரிசித்தார். தொடர்ந்து, சண்முகரையும் விஸ்வரூப தரிசனம், பஞ்சலிங்கம், குரு பகவான், சூரசம்ஹார மூர்த்தி, பெருமாள் உள்ளிட்ட சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர். விஜய் விஸ்வரூப தரிசனத்திற்கு வந்ததால் பாதுகாப்பு கருதி பக்தர்கள் யாரையும் விஸ்வரூப தரிசனத்தில் அனுமதிக்கவில்லை.
பின்னர் பேட்டரி காரில் ஏறி ராஜகோபுரம் அருகில் கூடியிருந்த தொண்டர்களை பார்த்து கையை அசைத்தவாறு சென்று காரில் ஏறி மீண்டும் கடற்கரை ரிசார்ட் விடுதிக்கு சென்றார். அங்கு சிறிது நேர ஓய்வுக்கு பிறகு காரில் தூத்துக்குடிக்கு சென்று அங்கிருந்து தனி விமானத்தில் சென்னை புறப்பட்டு சென்றார். தவெக தலைவர் விஜய், திருச்செந்தூர் கோயிலுக்கு வருவது தெரிந்து அவரது ரசிகர்களும், கட்சியினரும் நள்ளிரவு முதலே கோயில் முன்பு திரண்டனர். தூத்துக்குடி எஸ்பி மதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு விஜய் முதன்முறையாக வெளியே வந்தது, திருச்செந்தூருக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
* மாற்றுமதத்தினர் வழிபட விரும்பும் புத்தகத்தில் விஜய் கையெழுத்து
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்த விஜய் பாதுகாவலர்களுடன் நேராக உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு சென்றார். அங்குள்ள பதிவேட்டில் இணை ஆணையர் ராமு முன்னிலையில் விஜய் கையெழுத்திட்டார். பொதுவாக இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் தரிசனத்துக்கு வரும் இந்து அல்லாதவர்கள் நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி, கோயிலுக்குள் நுழைய வேண்டுமானால், தாங்கள் இந்து மதத்தின் மீதும், இறை நம்பிக்கை மீதும் பற்று கொண்டுள்ளோம் என்பதற்கான பிரத்யேக ஆவணத்தில் உறுதிமொழி அளித்துக் கையெழுத்திட வேண்டும். அதன்படியே விஜய் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இணை ஆணையர் ராமுவிடம் கேட்டதற்கு தவெக தலைவர் விஜய் தனது விருப்பத்தின்படி தான் கையெழுத்திட்டார் என்று மட்டும் கூறினார். மேலும், ஆகம விதிகள் மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்றியே இந்த அனுமதி வழங்கப்பட்டதாகவும், இதில் எவ்வித விதிமீறலும் நடைபெறவில்லை என்றும் கோயில் தரப்பு விளக்கமளித்துள்ளது. அதேவேளை விஜய்யின் தனியார் பாதுகாவலராக செயல்படும் மாற்றுமதத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இந்த புத்தகத்தில் கையெழுத்திடாமல் கோயிலினுள் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
* விஜய் அருகில் மாஜி அமைச்சர் ஆர்பி.உதயகுமார்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், உளுந்தூர்பேட்டை முன்னாள் எம்எல்ஏ குமரகுரு உள்ளிட்டோர் நேற்று அதிகாலை விஸ்வரூப தரிசனத்தில் சுவாமியை வழிபடுவதற்காக அதிகாலை 4 மணியளவில் கோயிலுக்கு வந்து சண்முக விலாச மண்டபத்தில் காத்திருந்தனர். அப்போது விஜய் வருகையையொட்டி ரசிகர்களும், தவெகவினரும் கோயில் முன்பு கூடி நின்று ஆரவாரத்தில் ஈடுபட்டனர். இதனால் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் ஓரம் கட்டப்பட்டனர். விஸ்வரூப தரிசனத்தில் விஜய்க்கு அர்ச்சகர்கள் கூட்டமாக வந்து வரவேற்பு அளித்தனர். விஸ்வரூபத்தில் தரிசனம் செய்ய வந்திருந்ததால் ஆர்.பி.உதயகுமாரையும் முன்னாள் தக்கார் கோட்டை மணிகண்டன் உள்ளிட்டோரை அர்ச்சகர்கள் விஜய்க்கு அருகிலேயே உட்கார வைத்து தரிசனம் செய்ய வைத்தனர்.
