புதுச்சேரி, ஏப். 29: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்(43). இவர் நெய்வேலி என்எல்சியில் தற்காலிக பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவருக்கும் நண்பர்கள் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு செந்தில்குமார் மனைவிக்கு அஞ்சல் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி செந்தில்குமாரிடம் சுவாமிநாதன் ரூ.3 லட்சம் பெற்றுள்ளார். பிறகு சிறிது காலம் கழித்து கொரோனாவால் அந்த வேலை தடைபட்டுவிட்டது.
பின்னர், ரயில்வே துறையில் அமைச்சர் இடஒதுக்கீட்டில் வேலை வாங்கி தருகிறேன் என்று சுவாமிநாதன் கூறியுள்ளார். இதையடுத்து செந்தில்குமாரின் சகோதரியின் மகன் தமிழ்ச்செல்வனுக்கு வேலைவாங்கி தருவதாக சுவாமிநாதன் கூறி மேற்கொண்டு பணம் கேட்கவே, இதனை நம்பி செந்தில்குமார் முன்பணமாக ரூ.3 லட்சம் பணத்தை சுவாமிநாதன் உறவினர் ராஜசேகரன் மற்றும் அவரது மனைவி நகோமி ஞானமணி ஆகியோரிடம் கொடுத்துள்ளார். பிறகு 2021ம் ஆண்டு சுவாமிநாதன் அறிவுறுத்தலின்பேரில், அவரது நண்பர் சிவராமனனிடம் ரூ.14 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதன்பின்னர் சுவாமிநாதன், தமிழ்செல்வனை டெல்லிக்கு அழைத்து சென்று ரயில்வே துறையில் வேலை கிடைத்துவிட்டது என பணியாணையை கொடுத்துள்ளார். இதனால் வேலை கிடைத்து விட்டது என செந்தில்குமார் மகிழ்ச்சியடைந்தார். பிறகு அவர் தன்னுடைய நண்பர் மகன்கள், உறவினர்கள் என மேலும் 4 பேருக்கு வேலை வாங்கித கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதற்காக அவர்களிடம் இருந்து ரூ.64 லட்சம் சுவாமிநாதன் பெற்றுள்ளார். அவர்களுக்கும் ரயில்வேயில் வேலை தயாராகிவிட்டது எனக்கூறி பணியாணை கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார்.
தொடர்ந்து தமிழ்செல்வன் உள்ளிட்ட 5 பேருக்கும் தமிழ்நாட்டில் பணிமாற்றம் செய்து தருகிறேன். அதுவரை காத்திருங்கள் என சுவாமிநாதன் கூறவே, அவர்களும் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வீட்டிலேயே இருந்துள்ளனர். பிறகு நாளடைவில் சுவாமிநாதன் கொடுத்த பணியாணை போலி என தெரியவரவே, அவர்கள் கொடுத்த மொத்த பணம் ரூ.87 லட்சத்தையும் திருப்பிக் கேட்டுள்ளனர். ஆனால் சுவாமிநாதன் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளனர். இது குறித்து லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் செந்தில்குமார் நேற்றுமுன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் சுவாமிநாதன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.
