*தண்ணீரை தேடி அலையும் கால்நடைகள்
விளாத்திகுளம் :தூத்துக்குடி மாவட்டத்தின் வானம் பார்த்த பூமியான கரிசல் பகுதியான விளாத்திகுளம் தொகுதி முழுவதும் பருவமழையை நம்பியே விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் குளங்கள், கண்மாய்களில் தேங்கும் நீரை கொண்டு விவசாயிகள் வத்தல், கம்பு, சோளம், பாசி பயிறு போன்ற பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர்.
கடந்த வடகிழக்கு பருவமழை விளாத்திகுளம் தொகுதி முழுவதும் போதுமானதாக இல்லாததால் வத்தல், வெங்காயம், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் போதிய விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் போட்ட முதலீட்டை கூட எடுக்க முடியாத நிலையை அடைந்தனர். குறைந்த மழைப்பொழிவு காரணமாக தொகுதி முழுவதும் உள்ள கண்மாய்கள் போதுமான அளவு நிரம்பவில்லை.
இந்நிலையில் விளாத்திகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, இப்பகுதியின் முக்கிய நீர்நிலையான விளாத்திகுளம் பெரிய கண்மாய் முற்றிலும் வறண்டு போய், வெறும் மண்ணும் சிறிதளவு நீருடன் குட்டையுமாக மட்டுமே காணப்படும் நிலை உள்ளது. மழைக்காலத்தில் நீரால் நிரம்பி, விவசாயத்திற்கும் குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கும் இந்த கண்மாய், இப்போது கடும் வறட்சியால் தன்னுடைய இயல்பான நிலையை இழந்துள்ளது.
கிணறுகள் மற்றும் பாசன ஆதாரங்களிலும் நீர்மட்டம் குறைந்து வருவதால், அடுத்தடுத்த நாட்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது.தற்போது சித்திரைப் பட்டம் என்பதால் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் ஏர் உழவு செய்து விவசாய நிலத்தை தயார் நிலையில் வைத்துள்ளனர். வரும் காலங்களில் பருவமழை பெய்யும் பொழுது தங்களது பகுதிக்கு ஏற்ற விவசாய பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்ய தயார் நிலையில் உள்ளனர்.
ஆனால் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். வெயிலின் தாக்கம் குறைந்து பருவமழை பெய்தால் மட்டுமே விவசாயம் என்ற நிலையில் விளாத்திகுளம் தொகுதி விவசாயிகள் தென்மேற்கு பருவமழையை நம்பி எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
மேலும் மக்களுக்கு தேவையான குடிநீரே கிடைக்க சிரமமாகி உள்ள சூழலில் பெரிய கண்மாய் குடிநீரை நம்பியிருந்த ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும் அலைந்து திரிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.நீர் பற்றாக்குறையால் கால்நடைகளின் உடல் நலனிலும் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், பால் உற்பத்தி குறையும் நிலையும் உருவாகி உள்ளதாகவும் விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். இது கிராமப்புற பொருளாதாரத்தையும் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது.
