விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலையில் தடுப்புக்கட்டைகளை உடைத்து செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம்

* இணைப்பு சாலை வசதி ஏற்படுத்தாமல் அலட்சியம்

* விழுப்புரம் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

விழுப்புரம் : விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலையில் தடுப்புக்கட்டைகளை உடைத்து செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, இணைப்பு சாலை வசதி அல்லது மாற்று நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.விக்கிரவாண்டி-தஞ்சாவூர் இடையே நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.

இதனிடையே தற்போது சேத்தியாத்தோப்பு முதல் தஞ்சாவூர் வரை இந்த நான்கு வழிச்சாலை பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ஆனால் விக்கிரவாண்டி-சேத்தியாத்தோப்பு இடையிலான சாலைப்பணிகள் மட்டும் கிடப்பில் போடப்பட்டு ஒப்பந்தாரரும் ஓட்டம் பிடித்ததால் மறுடெண்டர் விடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் மீண்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதனிடையே சாலை போடப்பட்ட பகுதிகளில் நடுவே தடுப்புக்கட்டைகளும் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் பல இடங்களில் சர்வீஸ் சாலைகள், பாலங்கள் கட்டாமல் சாலை ேபாடப்பட்டுள்ளதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.குறிப்பாக விழுப்புரம் நகரிலிருந்து பானாம்பட்டு வழியாக செல்லக்கூடிய நெடுஞ்சாலை ஆழங்கால் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடக்கிறது.

ஆனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல இணைப்பு சாலைகளோ, மேம்பாலமோ கட்டிக் கொடுக்கவில்லை. இதனால் தற்போது சாலையின் தடுப்புகளை உடைத்து வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக பானாம்பட்டு சாலையில் 2 தனியார் பள்ளிகள், தொண்டு நிறுவனங்கள், பல்வேறு கிராமங்களும் உள்ள நிலையில் நகருக்கு செல்லக்கூடிய பிரதான சாலையாகவும் இருக்கிறது.

ஆனால் இந்த சாலையை இணைக்கக்கூடிய வகையில் நகாய் நிறுவனம் எந்த திட்டமும் மேற்கொள்ளாமல் அலட்சியமாக இருப்பதால் விபத்துகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே , மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: