*பொதுமக்கள் கண்டு ரசித்தனர்
கண்ணமங்கலம் : கண்ணமங்கலத்தில் உள்ள ஏரியில் வெளிநாட்டு பறவைகள் அதிகளவில் தஞ்சமடைந்துள்ளதை பொதுமக்கள் கண்டு ரசித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியில் பெரிய ஏரி உள்ளது.
இந்த ஏரிக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் வெளிநாட்டு பறவைகள் வருகை தந்துள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் இந்த பறவைகளின் வரவை அப்பகுதி மக்கள் மிகுந்த ஆச்சரியத்துடனும் ஆர்வத்துடனும் கண்டு ரசித்து வருகின்றனர்.
கண்ணமங்கலம் ஏரியின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது அமர்தி பகுதியிலுள்ள ஜவ்வாது மலைத்தொடராகும். ஜவ்வாது மலைப்பகுதியில் சிறிய அளவில் மழை பெய்தாலும், அதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து மழைநீர் திரண்டு நாகநதியில் ஆற்று வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடும்.
இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் மூலம், நீர்வரத்து கால்வாய் வழியாகக் கண்ணமங்கலம் ஏரிக்குத் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
இதன் காரணமாக, மற்ற ஏரிகள் வறண்டு காணப்படும் காலங்களிலும், கண்ணமங்கலம் ஏரி பெரும்பாலும் வருடம் முழுவதுமே நீர் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது. ஏரியில் எப்போதும் நீர் இருப்பதால் மீன் வளம் அதிகமாக உள்ளது.
இதனால் இந்த ஏரி பறவைகளுக்குப் பாதுகாப்பான புகலிடமாக மாறியுள்ளது. தற்போது கோடைக்காலம் தொடங்கி உள்ள நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் வெளிநாட்டுப் பறவைகள் கூட்டம் கூட்டமாக ஏரிக்கு வரத் தொடங்கியுள்ளன.
குறிப்பாக, நீளமான கால்கள் மற்றும் அலகு கொண்ட நாரை இனங்கள் மற்றும் பல்வேறு வண்ணங்களைக் கொண்ட நீர்ப்பறவைகள் ஏரியின் கரைகளிலும், நீரின் நடுவே உள்ள திட்டுக்களிலும் அமர்ந்துள்ளன.
ஏரியில் உள்ள மீன்களை வேட்டையாடி உண்ணும் இந்தக் காட்சி காண்போரை வியக்க வைக்கிறது.கண்ணமங்கலம் ஏரிக்குத் தற்போது வந்துள்ள இந்தப் புதிய விருந்தினர்களைக் காண சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
எங்கள் ஊர் ஏரியில் இவ்வளவு அதிகமான பறவைகளை இதற்கு முன்பு நாங்கள் பார்த்ததில்லை. இதைப் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பறவைகளின் வரவு அதிகரித்துள்ளதால், இந்தப் பகுதியைச் சிதைக்காமலும், பறவைகளைத் தொந்தரவு செய்யாமலும் பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கண்ணமங்கலம் ஏரி தற்போது ஒரு மினி வேடந்தாங்கலாகவே உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
