அமராவதி ஆற்றில் தீர்த்தம் எடுத்தபோது மலைத்தேனீக்கள் கொட்டி 20 பக்தர்கள் காயம்

தாராபுரம் : தாராபுரம் அமராவதி ஆற்றில் தீர்த்தம் எடுத்த போது மலைத்தேனீ கொட்டியதில் 20 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த நஞ்சியம்பாளையம், குப்பிச்சிபாளையம், வரபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சார்ந்த 60க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்த 60 குடங்களில் அமராவதி ஆற்றில் தீர்த்தம் எடுத்தனர். பின்னர் குடங்களுக்கு தீபாராதனை காட்டினர்.

அப்போது அதன் புகை அருகில் மலைத் தேனீக்களின் கூட்டை நோக்கி சென்றது. இதனால் திடீரென தேனீக்கள் பறந்து வந்து பக்தர்களை விரட்டி விரட்டி கொட்டியது. இதில் மகாலிங்கம் (50),சரவணன் (45),பாலசுப்பிரமணியம் (25),ஆதில் ரஷீத் (5), தாராபுரம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் கவுதம்(18),அஸ்வின் (17),ஹரிஹரன் (17),ஆதித்யா (18) உட்பட 20 பேர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்களுக்கு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் மகாலிங்கம், சரவணன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: