கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரம்: விஜிபி அருகில் 30 வீடுகளுக்கு நோட்டீஸ்

சென்னை: கிழக்கு கடற்கரை சாலையை திருவான்மியூர் முதல் அக்கரை வரை 6 வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யும் பணிக்காக, விஜிபி அருகே 30 வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில், இழப்பீடு தொகை வழங்குவது தொடர்பாக விரைவில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிழக்கு கடற்கரை சாலையில் ஏராளமான கல்வி நிலையங்கள், தனியார் நிறுவனங்கள், குடியிருப்புகள், வர்த்தக கட்டுமானங்கள், பொழுதுபோக்கு மையங்கள் நிறைந்துள்ளன. இதன் காரணமாக இச்சாலையில் தினசரி போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, காலை, மாலை நேரங்களில் இந்த சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் சாலை விரிவாக்க திட்டத்தை தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை கையிலெடுத்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கினாலும், 2023ம் ஆண்டில் தான் கட்டுமான பணிகள் முடுக்கி விடப்பட்டன. அதன்படி, திருவான்மியூரில் தொடங்கி அக்கரை வரை 10.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 வழி சாலையாக விரிவுபடுத்தப்படுகிறது.

அடுத்தகட்டமாக உத்தண்டி, சோழிங்கநல்லூர் சந்திப்புகளில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், அக்கரை முதல் மாமல்லபுரம் வழியாக புதுச்சேரி வரை 4 வழிப் பாதையாக விரிவாக்கம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சாலை விரிவாக்க திட்டத்துடன் பொதுமக்களுக்கான நடைபாதை, நவீன மின் விளக்குகள், மழைநீர் வடிகால் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்நிலையில் திருவான்மியூர் – அக்கரை வரை, 6 வழிச் சாலை விரிவாக்க திட்ட பணிகள் 85 சதவீதம் முடிவடைந்து விட்டது என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அடுத்த 2 மாதங்களில் முழு பணிகளும் நிறைவு பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தற்போது இசிஆர் வழியாக பயணித்தால் சில விஷயங்களை கவனிக்கலாம்.

சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு தார்ச்சாலை போடப்பட்டுள்ளது. கொட்டிவாக்கம், அக்கரை, விஜிபி உள்ளிட்ட பகுதிகளில் சில நிலங்களை கையகப்படுத்த திட்டமிடப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. குறிப்பாக விஜிபி அருகில் 30 வீடுகள் அமைந்துள்ள பகுதியை கையகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு இழப்பீடு தொகை தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டு கையகப்படுத்தும் பணிகள் நிறைவு பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு இசிஆர் போக்குவரத்து நெரிசலுக்கு ஒருபுறம் தீர்வு காணப்பட்டு வந்தாலும், மறுபுறம் சாலையோரம் வாகனங்களை பார்க்கிங் செய்து புதிய நெருக்கடியை ஏற்படுத்தி விடுகின்றன. இதற்காக தடுப்புகளை வைத்து அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர். ஆனால் சாலை குறுகலாக மாறியதால் உள்ளூர்வாசிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அதன்பிறகு தடுப்புகள் அகற்றப்பட்டன. ​திருவான்மியூர் – அக்கரை வரை, 6 வழிச் சாலை விரிவாக்க திட்டத்தால் போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாக குறையும். மேலும், அகலமான சாலைகள், பாதசாரிகளுக்கு பிரத்யேக நடைபாதை, சாலையின் நடுவில் தடுப்புகள் போன்றவற்றால் விபத்துகள் குறையும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருவான்மியூர் – அக்கரை வரை, 6 வழிச் சாலை திட்ட விரிவாக்கம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், தினசரி வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். நீண்ட நேரம் டிராபிக்கில் காத்திருக்க வேண்டியதில்லை. சாலை விரிவாக்க பணிகளுக்கு வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக மரக் கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். சாலை விரிவடைந்து விட்டால் பயணம் அதிவிரைவாக மாறும். இருப்பினும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய போதிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்,’ என்றனர்.

Related Stories: