இந்தியா – நியூசி., இடையே கையெழுத்தாகவுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்.!! வர்த்தகத்தை இரட்டிப்பாக்குவதே முக்கிய இலக்கு

டெல்லி: இந்தியாவுக்கும் , நியூசிலாந்துக்கும் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இன்று டெல்லியில் கையெழுத்தாக உள்ளது. ஓமன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை தொடர்ந்து நியூசிலாந்து நாட்டுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா இன்று கையெழுத்திட உள்ளது.

டெல்லியில் இன்று இரவு நடைபெறும் நிகழ்ச்சியில் இந்திய வரதக் துறை அமைச்சர் பியூஷ்கோயல் மற்றும் நியூசிலாந்தின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறை அமைச்சர் மெக்லே ஆகியோர் இருநாடுகளுக்கிடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர்.

அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை இரு மடங்காக அதாவது 47,000 கோடி ரூபாயாக உயர்த்துவது இந்த ஒப்பந்தத்தின் இலக்கு ஆகும். இதன்படி நியூசிலாந்துக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு அளிக்கப்படும். அதே போல நியூசிலாந்தில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 95% வரிவிலக்கு வழங்கப்படும்.

அத்துடன் அடுத்த 15 ஆண்டுகளில் நியூஸிலாந்திடமிருந்து பல்வேறு துறைகளில் இந்தியா ரூ.1,88,000 கோடி அளவிற்கு முதலீடுகளை பெறும். தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின்படி, இந்தியாவின் ஆயுஷ் மருத்துவர்கள், யோகா பயிற்றுநர்கள், சமையல் கலைஞர்கள், இசை ஆசிரியர்கள் போன்ற துறைகளிலும், தவிர தகவல் தொழில்நுட்பம், பொறியியல் , சுகாதாரம், கல்வி மற்றும் கட்டுமானம் போன்ற பிற முக்கிய துறைகளிலும் திறமையான இந்தியர்கள் நியூசிலாந்தில் 3 ஆண்டுகால வரை தங்குவதற்காக சுமார் 5000 விசாக்கள் வழங்கப்படும். இந்த ஒப்பந்தம் 1 தலைமுறைக்கு பின்னர் நிகழும் ஒன்று என நியூசிலாந்து பிரதமர் கூறி இருக்கிறார். இந்த ஒப்பந்தம் உலகின் மிகப்பெரிய வர்த்தக சந்தைக்கான வாய்ப்பை நியூசிலாந்து ஏற்றுமதியாளர்களுக்கு தரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

மார்ச் 2025-இல் தொடங்கப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பரில் நிறைவடைந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து தற்போது இருநாடுகளுக்கிடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. வர்த்தகத்தை இருமடங்காக அதிகரிப்பது மட்டுமல்லாமல், விநியோகச் சங்கிலி ஒருங்கிணைப்பையும் நீண்டகால மூலதனத்தைம் ஆழப்படுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Related Stories: