உள்ளாவூர் ஊராட்சியில் ஏழை மக்களின் சிரமங்களை குறைக்க புதிய சமுதாயக்கூடம் கட்ட வேண்டும்: கிராம மக்கள் வலியுறுத்தல்

வாலாஜாபாத்:  உள்ளாவூர் ஊராட்சிக்கு புதிய சமுதாயக்கூடம் வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வாலாஜாபாத் ஒன்றியம் உள்ளாவூர் ஊராட்சியில் 180 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு  நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம், நூலகம், இ-சேவை மையம், தபால் நிலையம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்த ஊராட்சியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்  இப்பகுதியில் ஒரு சமுதாய கூடம் கட்டப்பட்டது. இதையொட்டி, கிராம மக்கள், தங்களது வீட்டு சுப நிகழ்ச்சிகளான திருமணம், மஞ்சள் நீராட்டு, பிறந்தநாள், நிச்சயதார்த்தம் உள்பட பல விழாக்களை இங்கு நடத்தினர். இதனால், கிராம மக்கள்  பயனடைந்தனர். அதன் மூலம் வரும் வருவாய், ஊராட்சி நிர்வாகத்துக்கு பயனாக  இருந்தது. தற்போது அந்த சமுதாய கூடம், சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால், இதனை யாரும் பயன்படுத்துவதில்லை.

இதையடுத்து, சுமார் 10 கிமீ தூரம் சென்று, வாலாஜாபாத் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடத்த வேண்டிய நிலை உள்ளது. அதில் வசதி உள்ளவர்களுக்கு பொருந்தினாலும், வசதியற்ற மக்கள், தங்களது வீடுகளிலேயே விழாக்களை நடத்துகின்றனர். பொதுமக்களுக்கு பயன்படாத இந்த சமுதாய  கூடத்தை ஒன்றிய அலுவலகம் சார்பில் கடந்த 2 மாதங்களுக்கு முன் முற்றிலுமாக இடிக்கப்பட்டது. ஆனால், அதே பகுதியில் புதிதாக சமுதாய கூடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், உள்ளாவூர் ஊராட்சியில் இருந்த சமுதாய கூடத்தால்  பல்வேறு சுப நிகழ்ச்சிகள் நடத்தி  மக்கள் பயனடைந்தோம்.

தற்போது இடிக்கப்பட்டுள்ள இந்த சமுதாய கூடத்தை மீண்டும் தரம் உயர்த்தி புதிய கட்டிடமாக கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். வசதியற்ற மக்கள், இங்கு தங்களது வீட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதோடு, ஊராட்சி நிர்வாகத்துக்கும் வருவாய் கிடைக்கும் என்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, ஒன்றிய நிதி அல்லது மாவட்ட நிதி மூலம், உள்ளாவூர் ஊராட்சியில் புதிய சமுதாய கூடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories:

>