சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்

காஞ்சிபுரம்: சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரில் கருப்பு உடையணிந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் ஜெயசுதா தலைமை தாங்கினார் முன்னாள் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட துணை தலைவர்கள் பாபு, விஸ்வநாதன், குமரேசன், சித்ரா, இணை செயலாளர்கள் வள்ளி, சுந்தரி, டில்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் கிருஷ்ணகுமார் வரவேற்றார்.

கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் லெனின், மாவட்ட இணைசெயலாளர் சுந்தரவடிவேலு ஆகியோர் பேசினர். சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும். ஒட்டுமொத்த ஓய்வூதியம் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து விஷ்ணுகாஞ்சி போலீசார், மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

Related Stories: