பிரதமர் நரேந்திர மோடி சார்பில் வங்கி கணக்கில் ரூ.2,000 வரவு வைப்பதாக வதந்தி கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு

கறம்பக்குடி, பிப்.24: பிரதமர் மோடி அவரவர் வங்கி ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்போவதாக வதந்தி பரவியதால், கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் ஆதார் எண்ணை பதிய மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக ஆதார் கார்டு பதிவதற்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது இதனையடுத்து நேற்று காலை 8 மணியிலிருந்து தாலுகா அலுவலகம் முன் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் டோக்கன் வாங்குவதற்காக வரிசையில் நின்றனர். கூட்ட நெரிசல் காரணமாக அங்கு இருந்தவர்கள் உடனே காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனே இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் கூட்டத்தை களைத்தனர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், பிரதமர் மோடி ரூ.2 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்த போகிறார் என்று சிலர் கூறியதால், போன் நம்பர் மற்றும் ஆதார் கார்டில் பதிய போகிறோம் என்று கூறியுள்ளனர்.

இதனால் கூட்டம் தாலுகா அலுவலகம் முன்பு நிரம்பி வழிந்தது. பின்னர் இவை அனைத்தும் வதந்தி என்று கூறியதையடுத்து தானாகவே மக்கள் கலைந்து சென்றனர். தொழிலாளர் நலவாரியத்தில் பதியுங்கள் என்று ஆளுங்கட்சியினர் கூறியதால் தினம்தோறும் ஏராளமான பெண்கள் தாலுகா அலுவலகத்தில் ஆதார், வங்கி கணக்கு எண்ணை பதிந்து வருகின்றனர். இதனை பயன்படுத்தி யாரோ சிலர் தேயற்ற புரளி கிளப்பி விட்டதால் தாலுகா அலுவலகமே மக்கள் கூட்டத்தில் நிரம்பி வலிந்தது.

Related Stories: