சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சென்னையில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே சென்னையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆற்றல்மிக்க செயலால் தமிழ்நாடு வளர்ச்சியடைந்துள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சியை பொறுக்காத பாஜக, தமிழ்நாட்டிற்கு நிதி வழங்க மறுக்கிறது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று முழு நம்பிக்கை உள்ளது.
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரை தேர்தல் விதிமீறல் ஆகும். பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளது ஏற்புடையது அல்ல. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்கட்சிகள் தோற்கடித்துவிட்டதாக கூறுவது உண்மை அல்ல. நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது மகளிர் மசோதா அல்ல; தொகுதி மறுவரையறை மசோத தான். மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த பாஜகவுக்கு உண்மையிலேயே விருப்பம் இல்லை.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஏற்கனவே எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இந்தியாவின் ஜனநாயத்தையும், அரசியலமைப்பையும் மோடி அரசு சீர்குலைத்து வருகிறது. தேர்தல் ஆணையம், சிபிஐ, ED, வருமானவரித்துறை போன்ற அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்துகிறது என அவர் கூறினார்.
