தரங்கம்பாடி, ஏப்.21: மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பதிவேற்றும் பணி நிறைவடைந்து பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கபட்டது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் சம்மந்தபட்ட அலுவலர்கள் வாக்கு பதிவு இயந்திரங்களில் தொகுதி வாரியாக போட்டியிடும் வேட்பாளரின் பெயர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கபட்ட சின்னங்களை மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர். பூம்புகார் தொகுதியில் 2,57,129 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 1,27,071 ஆண் வாக்காளர்களும், 1,30,050 பெண் வாக்காளர்களும் மூன்றாம் பாலினத்தவர் 8 பேரும் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க 140 இடங்களில் 342 வாக்கு சாவடிகள் அமைக்கபட்டுள்ளன. 22ஆம் தேதி வாக்கு சாவடி மையங்களுக்கு வாக்கு பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கபடும். வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பதிவேற்றும் பணியை தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் சஞ்சய்குமார்சிங்யாதவ் மாவட்ட தேர்தல் அலுவலரும் மற்றும் ஆட்சியருமான காந்த் கூட்டாக பார்வையிட்டனர்.
