தீரன் சின்னமலை விழா கருத்து கேட்பு கூட்டம்

மொடக்குறிச்சி, பிப். 24:     சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளான ஆடிப்பெருக்கு விழா ஆண்டுதோறும் அவர் வாழ்ந்த இடமான அரச்சலூர் அடுத்த ஓடாநிலையில் அரசின் சார்பில் அனுசரிக்கப்படுகிறது. ஆனால் அவர் பிறந்த நாளான ஏப்ரல் 17ம் தேதி மாலை மட்டுமே அணிவித்து வருகின்றனர். இந்நிலையில் தீரன் சின்னமலையின் நினைவு நாள் அனுசரிப்பதற்கு பதிலாக பிறந்த நாளான ஏப்ரல் 17ம் தேதி அரசின் சார்பில் கொண்டாட வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தீரன் சின்னமலையின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுவது குறித்து கருத்துக்கேட்பு கூட்டம் அரச்சலூர் அடுத்த ஓடாநிலையில் உள்ள சமுதாய கூடத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மொடக்குறிச்சி எம்.எல்.ஏ.சிவசுப்ரமணி தலைமை தாங்கினார். இதில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு, அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.

 இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தீரன் சின்னமலையின் நினைவு நாளுக்கு பதிலாக அவர் பிறந்த தினமான ஏப்ரல் 17ம் தேதி அரசின் சார்பில் கொண்டாடப்படுவது குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை முதலமைச்சரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.  இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கதிரவன், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், தென்னரசு, ஈரோடு எஸ்.பி.சக்தி கணேஷ், ஆர்.டி.ஓ.முருகேசன், காங்கயம் எம்.எல்.ஏ. தனியரசு, முன்னாள் அமைச்சர் ராமசாமி, மொடக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ.கிட்டுசாமி, மொடக்குறிச்சி ஒன்றியக்குழு தலைவர் கணபதி, துணைத்தலைவர் மயில் (எ) சுப்ரமணி, மொடக்குறிச்சி அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் கதிர்வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் மொடக்குறிச்சி தாசில்தார் ரவிச்சந்திரன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கு பின்னர் ஓடாநிலையில் தீரன் சின்னமலையின் மணிமண்டபம் அருகில் ரூ.55 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கலையரங்க பணியை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.

Related Stories: