விழுப்புரம், ஏப். 21: விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு முகநூல் பக்கத்தில் கொலை மிரட்டல் விடுத்த பாமக நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் வடக்கு மாவட்ட பாமக இளைஞரணி துணை செயலாளர் சதீஷ்குமார். இவர் தனது முகநூல் பக்கத்தில், \”விக்கிரவாண்டி தொகுதியில் பாமக வெற்றி பெற்றால் 2031-ல் தேர்தல், இல்லையென்றால் இடைத்தேர்தல்” என்ற வாசகம் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவினால் திமுகவினர் மற்றும் அப்பகுதி பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசில் வி.சாத்தனூரை சேர்ந்த, திமுக மாவட்ட கழக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் திருவளர்ச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து விழுப்புரம் எஸ்பி சாய் பிரனீத் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வென்ற திமுக வேட்பாளர் ராதாமணி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அதன்பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாமக வேட்பாளர் வென்றார். அதன்பிறகு 2024ம் ஆண்டு திமுக புகழேந்தி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அதன் பிறகு நடந்த இடைத்தேர்தலில் அன்னியூர் சிவா வென்று எம்எல்ஏவானார். தற்போது மீண்டும் அதே தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
