கள்ளக்குறிச்சி அருகே மாத ஏலச்சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடி செய்தவர் குடும்பத்தினருடன் தலைமறைவு பாதிக்கப்பட்ட மக்கள் எஸ்பியிடம் புகார்

கள்ளக்குறிச்சி, ஏப். 21: கள்ளக்குறிச்சி அருகில் உள்ள அரியபெருமானூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் கதிரவன். இவர் அதே கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளாக மாத ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். அதனை நம்பி கள்ளக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்டவர்கள் மாதச்சீட்டாக ரூ.20 ஆயிரம் தொகையை ஒவ்வொருவரும் தங்களது பெயரிலும் அல்லது நண்பர்கள், உறவினர்கள் பெயரிலும் குறைந்தது 3 சீட்டு முதல் 5 சீட்டு, 6 சீட்டு என அதிகபட்சமாக 9 சீட்டு என மாதம் மாதம் சுமார் 11 மாதத்துக்கான தொகையாக சுமார் ரூ.3 கோடி பணத்தை கட்டி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த ஆண்டு நடத்திய மாத சீட்டானது 12 மாதங்கள் முடிந்த நிலையில், மாத சீட்டு கட்டிய நபர்கள் பணத்தை திரும்ப பெற கதிரவன் வீட்டுக்கு தினமும் ஒவ்வொருவராக சென்று வீட்டில் பார்க்கும்போது கதிரவன் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். பின்னர் அவரது குடும்பத்துடன் தலைமறைவானது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தை நேரில் சந்தித்து, புகார் மனு அளித்தனர். மோசடியில் ஈடுபட்ட கதிரவன், சிறுவங்கூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக பணியாற்றியபோது கடந்த பிப்ரவரி மாதத்தில் சுமார் ரூ.1 கோடி பணம் மோசடி செய்த விவகாரத்தை அதிகாரிகள் கண்டுபிடித்து அப்போதே கதிரவனை சஸ்பெண்ட் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: