பெரம்பலூர், ஏப். 20: பெரம்பலூர் மாவட்டத்தில் கோடைகாலப் பயிர்களுக்குத் தேவையான உரங்கள் இருப்பில் உள்ளது. விவசாயிகள் ஒருங்கிணைந்த உர நிர்வாகம் கடைப்பிடிக்க வேண்டும் என வேளாண்மைத் துறை இணைஇயக்குநர் பாபு ெதரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது வேளாண்மை பயிர்களான, மக்காச்சோளம் 2450 ஹெக்டர், பயிர் வகை பயிர் 106 ஹெக்டர், எண்ணெய் வித்துப் பயிர் 1458 ஹெக்டர், நெல் பயிர் 2254 ஹெக்டர் மற்றும் தோட்டக் கலைப் பயிர்களான சின்ன வெங்காயம் 6534 ஹெக்டர், மர வள்ளிக்கிழங்கு 2011 ஹெக்டர், மஞ்சள் 615 ஹெக்டர் மற்றும் மிளகாய் 132 ஹெக்டர், பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில், யூரியா 2577 மெட்ரிக் டன், டிஏபி 1314 மெட்ரிக் டன், பொட்டாஷ் 454 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் உரம் 5694 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 497 மெட்ரிக் டன் என மாவட்டத்தில் கோடை காலப் பயிர்களுக்குத் தேவையான உரங்கள் இருப்பில் உள்ளது. விவசாயிகள் ஒருங்கிணைந்த உரம் நிர்வாகம் கடைப்பிடிக்க வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பாபு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப் பாடு) ராதாகிருஷ்ணன் தெரிவிக்கையில், பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள உர விற்பனையாளர்கள், உரங்களை பிஓஎஸ் இயந்திரம் மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு யூரியா உரங்களை அதிகமாக கொடுக்கக் கூடாது. யூரியா உரங்களை விற்பனை செய்யும்போது கண்டிப்பாக பில் முகவரியுடன் விவசாயியின் தொலைபேசி எண்ணுடன் விவசாயின் கையெப்பம் பெற்று கொடுக்க வேண்டும். உரம் விற்பனை நிலையத்தில் உரம் இருப்பு மற்றும் விலைப்பட்டியலை அவசியம் பராமரிக்க வேண்டும்.
எப்பொழுதும் விற்பனை நிலையத்தில் இருப்பு உரங்கள் சரியாக வைத்துக் கொள்ளவேண்டும். உரம் வைத்திருக்கும் கிடங்குகளுக்கு அவசியம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அனுமதி பெற்றுள்ள உரங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். மேலும் விவசாயிகள் யூரியா உரத்தை அதிகமாக பயன்படுத்தக் கூடாது. அடி உரமாக பயன் படுத்தக்கூடாது. அடி உரமாக காம்ப்ளக்ஸ் உரங்களையும் பயன்படுத்த வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் யூரியா உரம் கலைக்கொல்லியுடன் சேர்த்து பயன்படுத்தக் கூடாது.
விவசாயிகள் அவர்களின் பயிர் சாகுபடி பரப்புக்கு ஏற்ற வகையில் மட்டுமே யூரியாவை பயன்படுத்த வேண்டும். அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு யூரியா இரண்டு மூட்டைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். தழைச்சத்துக்காக யூரியாவுக்கு பதிலாக நானோ யூரியா பயன்படுத்தலாம். விவசாயிகள் உரங்களை எப்பொழுதும் பயிருக்கு ஒருங்கிணைந்த உர நிர்வாகத்துடன், சமச்சீர் உரங்களான அனைத்து வகையான வேளாண்மை இயற்கை எரு, பண்ணை மற்றும் மண்புழு எரு உரம், பசுந்தால் பயிரை மடக்கி உழவு செய்தல்,
வேளாண்மை வட்டார மையத்தில் கிடைக்கக் கூடிய அனைத்து வகையான உயிர் உரங்கள், அசோலா நீலப்பச்சை பாசி, அனைத்து வகையான பயிர்களுக்கு தேவையான நுண்ணூட்ட சத்து உரங்களை சரியான விதத்தில் பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு பயன்படுத்துவதால் பயிருக்கு வழங்கப்படும் உரம் அளவை குறைத்து, மண்ணின் வளம் அதிகரித்து உரச்செலவு குறைத்து அதிக மகசூல் பெறலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப் பாடு) ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
