முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி திருவாரூரில் மாவட்ட அதிமுக சார்பில் 140 ஜோடிகளுக்கு திருமணம் எம்பி வைத்திலிங்கம் நடத்தி வைத்து சீர்வரிசைகள் வழங்கினார்

திருவாரூர், பிப் 23: திருவாரூரில் மாவட்ட அதிமுக சார்பில் 140 ஜோடிகளுக்கு திருமணத்தை துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்பி தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களுக்கு 78 வகையான சீர்வரிசைகளை வழங்கினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி திருவாரூரில் மாவட்ட அதிமுக சார்பில் ஆண்டுதோறும் 100க்கும் மேற்பட்ட மணமக்களுக்கு தங்கத் தாலி, பட்டு வேஷ்டி, புடவை மற்றும் சீர்வரிசைகள், அறுசுவை உணவுகளுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டில் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாளையொட்டி 140 ஜோடிகளுக்கு திருமண விழா நேற்று வன்மீகபுரம் அம்மா அரங்கத்தில் நடைபெற்றது.

இதில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்பி தலைமை வகித்து திருமணத்தை நடத்தி வைத்தார். மேலும் மணமக்களுக்கு கட்டில், மெத்தை ,பீரோ, பேன் உள்ளிட்ட 78 வகையான சீர்வரிசை பொருட்களையும் எம்பி வைத்திலிங்கம் வழங்கினார். விழாவில் அமைச்சர்கள் அன்பழகன், விஜயபாஸ்கர், உதயகுமார், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினர். மேலும் மணமக்களுக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் சார்பில் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தனர். விழாவிற்கு அமைப்பு செயலாளர் டாக்டர் கோபால் முன்னிலை வகித்தார். அமைச்சர் காமராஜ் மகன் டாக்டர் இனியன் வரவேற்றார். மேலும் விழாவிற்கான ஏற்பாடுகளை அமைச்சர் காமராஜ் மனைவி லதா மகேஸ்வரி மற்றும் அவரது குடும்பத்தினர், கட்சியினர் சிறப்பாக செய்திருந்தனர். விழாவில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயபால், ஜீவானந்தம், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி, எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் முகமது அஷரப், பேரவை மாவட்ட செயலாளர் பொன் வாசுகி ராமன், நகர செயலாளர் கலியபெருமாள், மன்னார்குடி நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.ஜி குமார்,மன்னை கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் பரவை கலியபெருமாள், அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைத்தலைவர் மூவைவீரமணி, டிஎன்சிஎஸ்சி அண்ணா தொழிற்சங்க மாவட்ட பொறுப்பாளர் துரையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் காமராஜ் தற்போது உடல் நலக்குறைவு காரணமாக நேற்று நடைபெற்ற இந்த திருமண விழாவில் கலந்துகொள்ளாமல் நிகழ்ச்சிகளை நேரடி ஒலிபரப்பு மூலம் சென்னை வீட்டிலிருந்த படியே கண்டுகளித்தார்.

இந்நிலையில் அமைச்சர் காமராஜ் மறுபிறவி எடுத்துள்ளதாகவும் இதற்கு அவர் செய்துள்ள மக்களுக்கான தொண்டும், மக்களின் பிரார்த்தனையும் தான் காரணம் என விழாவில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் பேசினர். மேலும் வைத்திலிங்கம் பேசுகையில், திருமணத்திற்காக தாலி வேண்டும் என்று கேட்டு வருபவர்களுக்கு அதனை வாங்கிக் கொடுத்தாலும் அல்லது அந்த திருமணத்தை முன்னின்று நடத்தினாலும் அவர்களது குடும்பத்திற்கு தாலி பாக்கியம் கிடைக்கும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறுவார். அந்த வகையில் ஆண்டுதோறும் இதுபோன்ற திருமணத்தை அமைச்சர் காமராஜ் நடத்தி வருவதால் தான் அவருக்கு மறுபிறவி கிடைத்துள்ளதுடன் அவரது துணைவியாருக்கும் மாங்கல்ய பாக்கியம் கிடைத்துள்ளது என்றார்.

Related Stories: