அரசு ஊழியர்களாக அறிவிக்க கோரி அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

சேலம், பிப்.23: சேலம் நாட்டாண்மை கழக கட்டிட வளாகத்தில் அங்கன்வாடி ஊழியர் ம்றறும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும்போது, பணிகொடையாக ஊழிருக்கு ₹10 லட்சமும், உதவியாளர்களுக்கு ₹5 லட்சமும் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு மாநில துணை தலைவர் சரோஜா தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பிரேமா, மாவட்ட தலைவர் ரஹமத்பீ, மாவட்ட பொருளாளர் மனோன்மணி மற்றும் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘‘தமிழகத்தில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் பணியாளர்கள் என சுமார் 2.50 பேர் பணிபுரிந்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் 5,700 பேர் பணிபுரிந்து வருகிறோம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் சிறப்பு விதி 110ன் கீழ் அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியராக்குவேன் என அறிவித்தார். அதனை முதலமைச்சர் நிறைவேற்றி உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இதற்காக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. ஆனால், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டம் தொடர்ந்து 4 நாட்கள் நடத்தப்படுகிறது. இதில் சேலத்தை சேர்ந்த 22 கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.’’ என்றனர்.

Related Stories: