உளுந்தூர்பேட்டையில் வாக்குசேகரிப்பின்போது தவெக-பாஜக மோதல்

உளுந்தூர்பேட்டை, ஏப். 18: வாக்குசேகரிப்பின்போது பாஜக-தவெகவை சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகரப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு தமிழக வெற்றிக்கழக வேட்பாளருக்கு ஆதரவாக நகர செயலாளர் விஜய்செல்வா (34) உள்ளிட்ட நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது பேருந்து நிறுத்தம் அருகில் வந்த பாஜக நகர செயலாளர் அஜய்குமார் (27) இங்கு வந்து வாக்கு சேகரிக்க கூடாது என கூறி வாக்கு வாதம் செய்துள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் இரண்டு தரப்பை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் விஜய்செல்வா படுகாயம் அடைந்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அஜய்குமார் படுகாயம் அடைந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பிரச்னை தொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் விஜய்செல்வா கொடுத்த புகாரின் பேரில் அஜய்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அஜய்குமார் கொடுத்த மற்றொரு புகாரின் பேரில் விஜய்செல்வா மற்றும் அவருடன் இருந்த நிர்வாகிகள் சந்துரு, அண்ணாமலை, பாரதி உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: