சங்கராபுரம், ஏப்.18: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ஆரூர் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ராமன் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், விழுப்புரத்தில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்ற அவர், இரண்டு நாட்கள் கழித்து வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பகுதியில் உள்ள கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, மரத்தால் செய்யப்பட்ட பீரோவின் லாக்கர் உடைக்கப்பட்டு, அதிலிருந்த சுமார் 42 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.4 லட்சத்து 36 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, சங்கராபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சங்கராபுரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீடு முழுக்க ஆய்வு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
