கொடைக்கானல்: கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த இளைஞர்களிடம் துப்பாக்கி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், நகை மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. முதலமைச்சர், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் வாகனங்களும் சோதனையிடப்பட்டு வருகின்றன. சென்னையில் இரவில் ஒரு வண்டி விடாமல் சோதனை நடைபெறுகிறது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் கொடைக்கானலின் முகப்பு பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் இருந்து 4 இளைஞர்கள் வந்த ஜிப்பை சோதனை செய்தபோது துப்பாக்கி இருந்தது கண்டுபிடித்துள்ளனர்.
வாகனத்தில் இருந்த 4 இளைஞர்களும் சோதனை தவிர்த்துவிட்டு, வேகமாக ஜீப்பை எடுத்து தப்பித்து சென்றுள்ளனர். தேர்தல் பறக்கும் படையினர் கொடைக்கானல் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு, ஜீப்பை பின்தொடர்ந்துள்ளனர். சுமார் 3 கி.மீ. தூரம் காரை பின்தொடர்ந்து சென்று துப்பாக்கியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். துப்பாக்கி மற்றும் ஜீப்பை பறிமுதல் செய்த நிலையில் 4 இளைஞர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
