கோவை காந்திபுரம் சிவா டெக்ஸ்டைல்ஸ்-ல் 2வது நாளாக ஐடி ரெய்டு

கோவை, ஏப். 12: கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையம் எதிரே உள்ள சிவா டெக்ஸ்டைல்ஸ்-ல் 2வது நாளாக நேற்றும் ஐடி ரெய்டு நடந்தது. கோவை காந்திபுரத்தில் சிவா டெக்ஸ்டைல்ஸ் செயல்பட்டு வருகிறது. 3 தளம் கொண்ட இந்த கடையில் நேற்று முன்தினம் காலை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்த வந்தனர். காலை 11 மணி முதல் சுமார் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஜவுளி நிறுவனத்தினர் முறையாக வருமான வரி கட்டியுள்ளனரா? என ஆவணங்களை கைப்பற்றி சோதனை செய்தனர்.

கணினியில் வரவு, செலவு கணக்குகளை ஆராய்ந்தனர். இதேபோல் திருப்பூர், ஈரோடு, கோபி உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான கடைகளிலும் நேற்று முன்தினம் சோதனை நடந்தது. இதனைத்தொடர்ந்து கோவை காந்திபுரம் கடையில் நேற்று முன்தினம் தொடர்ந்த இந்த சோதனை நேற்றும் 2வது நாளாக தொடர்ந்தது.

இந்நிறுவனத்தினர் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரில், இந்த சோதனை நடந்து வருகிறது. சோதனையை முன்னிட்டு கடைக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. அங்கு துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் தொடர்ந்து 2வது நாளாக சோதனை நடைபெற்றது. நிறுவனத்தினர் முறையாக வருமான வரி கட்டியுள்ளார்களா? என ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: