கோவை, ஏப்.12: கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 23ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் ஓட்டு சாவடிகளில் பயன்படுத்தும் ஆவணங்களை அனுப்பி வைத்து வருகிறது. கடந்த சில நாட்களில் 60க்கும் மேற்பட்ட ஓட்டு சாவடி ஆவணங்கள் கோவைக்கு வந்து சேர்ந்தது. தற்போது மைசூரில் இருந்து அழியாத மை பெறப்பட்டிருக்கிறது. ஓட்டு போடும் முன் விரலில் இந்த மை வைக்கப்படும்.
இதற்கு தேவையான மை பாட்டில்கள் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், சூலூர், சிங்காநல்லூர், கோவை தெற்கு, கோவை வடக்கு, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் பொள்ளாச்சி, வால்பாறை சட்டமன்ற தொகுதிகளுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகளில் 3563 ஓட்டு சாவடிகள் இருக்கிறது.
அனைத்திற்கும் இருப்பு பாட்டில் உள்பட 4858 மை பாட்டில் பெறப்பட்டது. ஒவ்வொரு பாட்டிலும் 10 மில்லி அளவிற்கு மை இருக்கும். இந்த மை பாட்டில்கள் ஓட்டு சாவடி வாரியாக தேர்தலுக்கு முந்தைய நாள் பிரித்து அனுப்பி வைக்கப்படும். இந்த மை மிக ரகசியமாக பாதுகாக்க வேண்டும் என தேர்தல் பிரிவுக்கு உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது.
